"சிவப்பு, மஞ்சள் நிறத்தில் புதிய லுக்! முதல்வர் ஜோசப் விஜய் படத்துடன் மாற்றப்பட்ட TNSTC செயலி!
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தின் TNSTC செயலி சிவப்பு, மஞ்சள் வண்ணத்தில் முதல்வர் ஜோசப் விஜய் படத்துடன் மாற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகத்தின் அதிகாரப்பூர்வத் மொபைல் செயலியான டிஎன்எஸ்டிசி (TNSTC) செயலியின் முகப்பு வண்ணம், ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி நிறங்களான சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்திற்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து, கடந்த மே 10-ஆம் தேதி தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றார். விஜய் தலைமையில் தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் பல்வேறு நிர்வாக மாற்றங்கள் மற்றும் முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு வருகின்றன.
போக்குவரத்துத் துறையைப் பொறுத்தவரை பழைய டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுப் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், புதிதாக வாங்கப்பட்டு வரும் அரசுப் பேருந்துகளுக்குத் தமிழக வெற்றிக் கழகக் கொடியின் வண்ணங்களான சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள் பூசப்பட்ட புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகிப் வைரலாகின. அரசுப் பேருந்துகள் ஏற்கனவே பச்சை, நீலம் மற்றும் சிவப்பு உள்ளிட்ட வண்ணங்களில் இயங்கி வந்த நிலையில், தற்போது மஞ்சள் மற்றும் சிவப்பு வண்ணங்கள் பூசப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: முதல்வர் விஜய்க்கு பூங்கொத்து கொடுத்த மோப்பநாய் ராக்கி..! சாகச நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த CM..!!
இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் பயணிகள் மின்-முன்பதிவு செய்யப் பயன்படும் அதிகாரப்பூர்வத் 'டிஎன்எஸ்டிசி' (TNSTC) செயலியிலும் தவெக கொடி வண்ணம் பிரதிபலிக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
முன்னதாகப் பெரும்பாலான பகுதி வெள்ளை நிறத்தில் காட்சிளித்த அந்தச் செயலி, தற்போது முழுவதும் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற பின்னணிக்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த புதிய முகப்பு பக்கத்தில் இடது பக்கம் முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் புகைப்படமும், வலது பக்கம் அரசுப் போக்குவரத்துக்கழகத்தின் லோகோவும் இடம்பெற்றுள்ளன. அரசுச் செயலியின் இந்த புதிய அவதாரம் பயணிகள் மற்றும் சமூக வலைத்தளப் பயனர்களிடையே பெரும் விவாதத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: பழங்குடியினரை வெளியேற்றும் சதியா? மத்திய அரசின் வன உரிமை சட்டத்திற்கு அமைச்சர் வன்னியரசு எதிர்ப்பு!