இன்று தொடங்குகிறது மருத்துவக் கலந்தாய்வு... மாணவர்களே இதையெல்லாம் எக்காரணம் கொண்டும் மறந்துடாதீங்க...!
இன்று முன்னாள் ராணுவத்தினரின் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், விளையாட்டுப் பிரிவு மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஆகியோருக்கான கலந்தாய்வும் நடைபெறுகிறது
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புக்கான சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கு இன்று காலை கலந்தாய்வு தொடங்குகிறது. இந்த நிலையில், மாணவர்களுக்கான அறிவுறுத்தல்களை மருத்துவக் கல்வி இயக்குநரகம் வழங்கியுள்ளது. விவரங்களுடன் இணைகிறார் நமது செய்தியாளர் சங்கரன்.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில், இன்று காலை நேரடி முறையில் சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு மட்டும் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக் குழு இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இன்று முன்னாள் ராணுவத்தினரின் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், விளையாட்டுப் பிரிவு மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஆகியோருக்கான கலந்தாய்வும், அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான கலந்தாய்வும் நடைபெறுகிறது.
இதையும் படிங்க: நீட் குறித்து விவாதத்திற்கு அரசு தயார்! சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அமித் ஷா கடிதம்!
இதில், எந்தெந்த நீட் தேர்வு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் கலந்துகொள்ளலாம் என்பது குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. 7.5 சதவீத இடஒதுக்கீட்டைப் பொறுத்தவரை, காலை 10 மணிக்கு நீட் தேர்வில் 599 முதல் 469 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ள 448 மாணவர்களுக்கும், மதியம் 12 மணிக்கு 468 முதல் 433 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ள 464 மாணவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சுமார் 950 மாணவர்கள் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் நடைபெறும் இந்தக் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கலந்தாய்வுக்கு வரும்போது மாணவர்கள் என்னென்ன சான்றிதழ்களைக் கொண்டு வர வேண்டும் என்பது குறித்தும் மருத்துவக் கல்வி இயக்குநரகம் பல்வேறு முக்கியமான தகவல்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, கலந்தாய்வுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே மாணவர்கள் வர வேண்டும். பெற்றோர் இருவரும் வரக்கூடாது. தந்தை அல்லது தாய் என பெற்றோரில் ஒருவர் மட்டுமே மாணவருடன் கலந்தாய்வு அரங்கிற்குள் வர அனுமதிக்கப்படுவார்.
மேலும், கலந்தாய்வுக் கட்டணமாக ரூ.500-க்கான டி.டி.யை அந்த நேரத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அந்த ரூ.500-க்கான டி.டி.யை “Secretary, Selection Committee, Chennai-10” என்ற பெயரில் எடுத்து வர வேண்டும்.
அதேபோல், அனைத்து அசல் சான்றிதழ்களையும் மாணவர்கள் கட்டாயம் கொண்டு வர வேண்டும். நீட் தேர்வு எழுதும்போது வழங்கப்பட்ட ஹால் டிக்கெட், நீட் தேர்வு முடிவுக்குப் பிறகு வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ், 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 11ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றைக் கொண்டு வர வேண்டும்.
மேலும், 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில்தான் படித்தோம் என்பதை உறுதி செய்யும் வகையில், சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியரிடம் இருந்து பெறப்பட்ட சான்றிதழையும் மறக்காமல் கொண்டு வர வேண்டும்.
அதேபோல், பிற்படுத்தப்பட்ட வகுப்பு உள்ளிட்ட பிரிவுகளுக்கான சான்றிதழ்கள், விளையாட்டு மற்றும் செயல்பாட்டு சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து அசல் ஆவணங்களையும் கொண்டு வர வேண்டும்.
மாணவரின் சாதிச் சான்றிதழ் மட்டுமின்றி, பெற்றோரில் ஒருவருடைய சாதிச் சான்றிதழையும் கொண்டு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கலந்தாய்வு அரங்கிற்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதி கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கலந்தாய்வுக்கு வரக்கூடிய மாணவர்கள் எவ்வாறு வர வேண்டும், என்னென்ன முன்னேற்பாடுகளுடன் வர வேண்டும், எந்தெந்த சான்றிதழ்களைக் கொண்டு வர வேண்டும் என்பது தொடர்பான முழுமையான அறிவுறுத்தல்களை மருத்துவக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.
மற்றபடி, பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு எந்தெந்த தேதிகளில் நடைபெறும் என்பதும், அது முழுமையாக ஆன்லைன் வழியாகவே நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 17 நாட்களில் அதிரடி மாற்றம்! மத்திய உயர்கல்விச் செயலாளர் பதவியில் புதிய முகம்? யார் இந்த தீப்தி கவுர் முகர்ஜி?