×
 

2வது முறையாக.. நள்ளிரவு முதல் சுங்கக்கட்டணம் உயர்வு..!! எந்தெந்த டோல்கேட்டில் தெரியுமா..??

கடந்த ஆண்டு மொத்த விலை குறியீடு கட்டணத்தை நெடுஞ்சாலை அமைச்சகம் குறைத்தது.

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் சுமார் 7,000 கிலோமீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் 80 சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 66 சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 1 ஆம் தேதியும், மீதமுள்ளவற்றில் செப்டம்பர் 1 ஆம் தேதியும் கட்டணங்கள் மாற்றியமைக்கப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் காரணமாக ஏப்ரல் மாத உயர்வு தள்ளிப்போய் மே 23 முதல் அமலுக்கு வந்தது. தற்போது மீண்டும் புதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை புறவழிச்சாலையில் உள்ள வானகரம், அம்பத்தூர் அருகே சூரப்பட்டு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் புதிய கட்டணங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. வாகன வகைக்கு ஏற்ப ரூ.5 முதல் அதிகபட்சம் ரூ.30 வரை உயர்வு ஏற்பட்டுள்ளது. இது மே மாதத்திற்குப் பிறகு இரண்டாவது உயர்வாகும்.

குறிப்பாக, சுங்கச்சாவடியில் இருந்து 20 கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் தனியார் வாகன உரிமையாளர்களுக்கான மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.350-லிருந்து ரூ.360 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உள்ளூர்வாசிகளுக்கு அடிக்கடி பயணம் செய்வதற்கு உதவும் இந்த பாஸ் கட்டணமும் தொடர்ந்து உயர்ந்து வருவதால், தினசரி பயணிகள் மற்றும் சுற்றுப்புற வாகன ஓட்டிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: "விஜய் அண்ணாச்சி... அரிசி விலை என்னாச்சு?" ... தவெக அரசுக்கு செக் வைத்த ஆர்.பி.உதயகுமார்...!

தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்கையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் கடந்த ஆண்டு மொத்த விலை குறியீட்டின் அடிப்படையில் ஒருமுறை கட்டணத்தை குறைத்திருந்தது. ஆனால் இதுதொடர்பான வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் முந்தைய கணக்கீட்டு முறையை மீண்டும் பயன்படுத்த உத்தரவிட்டது. அதன்படி அமைச்சகம் கடந்த மாதம் 29 ஆம் தேதி சுற்றறிக்கை வெளியிட்டு பழைய முறையை அமல்படுத்தியது. இதனால் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட ஒருமுறை குறைப்பு ரத்து செய்யப்பட்டு, பல தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் கட்டணம் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.

கட்டண நிர்ணயம் ஆண்டுக்கு 3 சதவீத நிலையான உயர்வுடன் மொத்த விலை குறியீட்டின் 40 சதவீத மாற்றத்தை இணைத்து கணக்கிடப்படுகிறது. வணிக வாகனங்கள், குறிப்பாக லாரிகள் மற்றும் பல அச்சு வாகனங்களுக்கு உயர்வு அதிகமாக இருப்பதால், போக்குவரத்து செலவு உயர்ந்து அத்தியாவசியப் பொருட்களின் விலையிலும் தாக்கம் ஏற்படக்கூடும் என வணிகர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த உயர்வு மாநிலம் முழுவதும் பல சுங்கச்சாவடிகளில் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதையும் படிங்க: நடுக்கடலில் பழுதாகி நின்ற படகு... சிறுவர்கள் எடுத்த விபரீத முடிவு... மீனவ கிராமத்தை சூழ்ந்த சோகம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share