×
 

ஆடம்பர கார்களின் அரசர்கள்! அரசியல் மட்டுமல்ல.. காரிலும் மாஸ்! தமிழகத்தின் டாப் 10 MLA-க்கள் பட்டியல்!!

மக்கள் வரிப்பணத்தில் மேலும் செலவு செய்வது தேவையா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

தமிழக சட்டப்பேரவையில் அண்மையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்த எம்.எல்.ஏ.க்களுக்கான வாகன வசதித் திட்டம், மாநிலம் முழுவதும் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் புதிய கார் வழங்கப்படும் என்றும், ஓட்டுநர், எரிபொருள் மற்றும் பராமரிப்புச் செலவுகளுக்கு மாதம் ரூ.75,000 வாகனப்படி அளிக்கப்படும் என்றும், உதவியாளர் நியமனத்திற்கு கூடுதலாக ரூ.25,000 வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். 

தொகுதிப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வாகன வசதி அவசியம் என்பதே அரசின் நியாயப்படுத்தல். எனினும், இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே பல எம்.எல்.ஏ.க்கள் கோடீஸ்வரர்களாகவும், விலையுயர்ந்த தனிப்பட்ட கார்களை வைத்திருப்பவர்களாகவும் இருப்பதால், மக்கள் வரிப்பணத்தில் மேலும் செலவு செய்வது தேவையா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

மாநிலம் சுமார் ரூ.13 லட்சம் கோடி கடன் சுமையில் இருப்பதாக அரசே வெள்ளை அறிக்கை வெளியிட்டிருக்கும் நிலையில், இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பல எம்.எல்.ஏ.க்கள் ஏற்கனவே ஆடம்பர வாகனங்களை வைத்திருப்பதால், தேவையானவர்களுக்கு மட்டும் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இந்தப் பின்னணியில், தேர்தல் வேட்பு மனுக்களில் அறிவிக்கப்பட்ட சொத்து விவரங்களின் அடிப்படையில், காஸ்ட்லி கார் வைத்திருக்கும் தமிழக எம்.எல்.ஏ.க்களின் பட்டியல் கவனத்தை ஈர்த்துள்ளது. 

இதையும் படிங்க: அவையில் கலகலப்பு.. பாமக எம்எல்ஏவிடம் ஆதவ் சொன்ன ‘ஆனந்த் அண்ணன்’ வார்த்தை! நடந்தது என்ன??

பத்தாவது இடத்தில் தவெக அமைச்சர் பிரபு இருக்கிறார். அவர் சுமார் ரூ.90.57 லட்சம் மதிப்புள்ள ஆடி ஏ6 45 மாடல் காரை வைத்துள்ளார். ஒன்பதாவது இடத்தில் திமுகவின் மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ. எஸ். கதிரவன் உள்ளார். அவரிடம் ரூ.97 லட்சம் மதிப்பிலான லேண்ட் ரோவர் டிஃபெண்டர் உள்ளது. எட்டாவது இடத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இடம்பெற்றுள்ளார். அவரின் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் சுமார் ரூ.1 கோடி மதிப்புடையது. ஏழாவது இடத்திலும் மீண்டும் கதிரவன் இடம் பிடித்துள்ளார். அவரின் டொயோட்டா வெல்ஃபயர் கார் ரூ.1.33 கோடி மதிப்பிலானது. 

ஆறாவது இடத்தில் விளவங்கோடு எம்.எல்.ஏ. டி.டி. பிரவீன் உள்ளார். அவரிடம் ரூ.1.35 கோடி மதிப்பிலான டொயோட்டா லேண்ட் க்ரூஸர் உள்ளது. ஐந்தாவது இடத்தில் அதிமுகவைச் சேர்ந்த லீமா ரோஸ் இருக்கிறார். அவரின் லெக்ஸஸ் எல்எக்ஸ் 570 மாடல் கார் சுமார் ரூ.1.57 கோடி மதிப்புடையது. நான்காவது இடத்தில் முதலமைச்சர் விஜய் உள்ளார். அவரின் டொயோட்டா வெல்ஃபயர் ரூ.1.63 கோடி மதிப்பிலானது. மூன்றாவது இடத்திலும் விஜய் இடம்பெற்றுள்ளார். அவரின் பிஎம்டபிள்யூ ஐ7 கார் சுமார் ரூ.2.01 கோடி மதிப்புடையது.

இரண்டாவது இடத்தில் பிரேமலதா உள்ளார். அவரின் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் ரூ.2.19 கோடி மதிப்பிலானது. முதலிடத்தில் மீண்டும் முதலமைச்சர் விஜய் இருக்கிறார். அவரின் லெக்ஸஸ் 350எச் மாடல் கார் சுமார் ரூ.3.07 கோடி மதிப்புடையதாக உள்ளது. இந்தப் பட்டியல், பல எம்.எல்.ஏ.க்கள் ஏற்கனவே உயர்தர வாகனங்களை வைத்திருப்பதை வெளிப்படுத்துகிறது. 

அரசின் புதிய அறிவிப்பு தொகுதிப் பணிகளுக்கு உதவியாக இருக்கும் என்ற வாதம் ஒருபுறம் இருந்தாலும், நிதி நெருக்கடியில் இத்தகைய செலவு தேவையா என்ற விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. பொதுமக்கள், இந்த வசதிகள் உண்மையில் மக்கள் நலனுக்காக பயன்படுமா என்பதை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
 

இதையும் படிங்க: விஜய் வசதிக்காக அலுவலகம் மாற்றமா? அமைச்சர் ஆதவ் சொன்ன முக்கிய காரணம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share