திருவண்ணாமலை அருகே பயங்கர விபத்து: கார் - அரசுப் பேருந்து மோதி ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி!
திருவண்ணாமலை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில், கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த அரசுப் பேருந்து மீது மோதியதில் இரண்டு பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் தாய் பவுனு அம்மாளுக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக, அவரைச் சிகிச்சைக்காக விழுப்புரத்தில் உள்ள மருத்துவமனைக்கு இன்று வியாழக்கிழமை காரில் அழைத்துச் சென்றுள்ளனர். அந்த காரில் சக்திவேலின் மனைவி கனகவல்லி, சகோதரர் கோவிந்தராஜ் மற்றும் மாமனார் கலைவாணன் ஆகியோர் உடன் சென்றுள்ளனர். காரைத் தம்பி கோவிந்தராஜ் ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
திருவண்ணாமலை - விழுப்புரம் நெடுஞ்சாலையில் ராஜந்தாங்கல் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலைத் தடுப்புகளைத் தாண்டி எதிர் திசையில் பாய்ந்தது. அப்போது திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது கார் பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் காரின் முன்பகுதி முற்றிலும் நசுங்கியதில், சக்திவேலின் மனைவி கனகவல்லி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேட்டவலம் காவல்துறையினர் மற்றும் அவசர ஊர்தி ஊழியர்கள், காரில் சிக்கியிருந்த மற்றவர்களை மீட்டுத் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் பலனின்றி பவுனு அம்மாள் மற்றும் கலைவாணன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த கோவிந்தராஜுக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வேட்டவலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் வேங்கிக்கால் கிராமத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: NEW DRAVIDIAN STOCK... ALL ARE WELCOME.! திமுக இளைஞரணி சந்திப்புக்கு முதல்வர் அழைப்பு...!
இதையும் படிங்க: திருக்கார்த்திகை தீபத் திருவிழா: மலை உச்சியை அடைந்த 300 கிலோ எடை கொண்ட மகா தீபக் கொப்பரை!