ரயில் டிக்கெட் கேன்சல் பண்றீங்களா..?? கட்டண விதிகளில் முக்கிய மாற்றங்கள்..!! இன்று முதல் அமல்..!!
ரயில் புறப்படுவதற்கு முன்னர் 8 மணி நேரத்திற்குள் பயணச்சீட்டை ரத்து செய்தால் அதற்குரிய கட்டணம் திருப்பித் தரப்படாது.
இந்திய ரயில்வே பயணிகளின் வசதிக்காகவும், மலிவு விலையிலான போக்குவரத்து வசதியாகவும் நீண்ட காலமாக முதன்மைத் தேர்வாக இருந்து வருகிறது. பல்வேறு தரப்பு மக்களும் தங்கள் ஊருக்கு செல்லும் போது முதலில் ரயில் டிக்கெட்டை பதிவு செய்து வைப்பது வழக்கம். உறுதியாக பயணம் உறுதியாகிறதா என்பதை உறுதி செய்யாமலேயே டிக்கெட் எடுத்து, கடைசி நேரத்தில் ரத்து செய்வது சிலரிடம் பழக்கமாகி உள்ளது.
இத்தகைய தவறான பயன்பாட்டைத் தடுக்கும் வகையில், உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட் ரத்து செய்வதற்கான புதிய விதிமுறைகளை இந்திய ரயில்வே அமல்படுத்தியுள்ளது. ஏப்ரல் 1 முதல் இந்தப் புதிய விதிகள் நாடு முழுவதும் அமலுக்கு வருகின்றன. இதன்படி, ரயில் புறப்படும் நேரத்திற்கு 8 மணி நேரத்திற்குள் டிக்கெட்டை ரத்து செய்தால், எந்தவிதமான பணத் திருப்பியும் வழங்கப்படாது.
அதாவது, முழுத் தொகையும் பயணிக்கு இழப்பாகும். ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பாகவும், 24 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால், பயணக் கட்டணத்தில் 50 சதவீதம் மட்டுமே திருப்பித் தரப்படும். மேலும், ரயில் புறப்பட 72 மணி நேரத்திற்கு முன்பாகவும், 24 மணி நேரத்திற்குள் ரத்து செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு, ரத்து கட்டணத்துடன் பயணக் கட்டணத்தில் 25 சதவீதம் பிடித்தம் செய்யப்படும்.
இதையும் படிங்க: ரயிலில் மிடில் பெர்த்-ஆ..!! அப்போ உங்களுக்கு தான் இது..!! வெளியான முக்கிய தகவல்..!!
ரயில் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பாக ரத்து செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு மட்டுமே, தற்போதுள்ள நடைமுறைப்படி குறைந்தபட்ச ரத்து கட்டணத்தைத் தவிர முழுத் தொகையும் திருப்பித் தரப்படும். இந்த மாற்றங்கள் மூலம், கடைசி நேர ரத்துக்களை குறைத்து, உண்மையான பயணிகளுக்கு இடம் கிடைக்கச் செய்ய ரெயில்வே நோக்கம் கொண்டுள்ளது.
இதனுடன், ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு வரை பயணிகள் தாங்கள் ஏறும் நிலையத்தை மாற்றிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது அட்டவணை வெளியாவதற்கு முன்பு வரை மட்டுமே இந்த மாற்றம் அனுமதிக்கப்பட்டு வந்தது. இந்தப் புதிய வசதி பயணிகளுக்கு கூடுதல் வசதியை ஏற்படுத்தும்.
இந்தப் புதிய விதிமுறைகளால், டிக்கெட் தரகர்கள் பெருமளவில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கடைசி நேரத்தில் ரத்து செய்து பணத்தை திரும்பப் பெறும் செயலுக்கு தடை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், உண்மையான பயணிகளுக்கு இடம் கிடைப்பது எளிதாகும் என்று ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இந்த மாற்றங்கள் பயணிகளுக்கு சற்று கடுமையானதாகத் தோன்றினாலும், ரெயில் அமைப்பின் திறனை அதிகரித்து, இட விரயத்தை குறைக்கும் என்று கருதப்படுகிறது. எனவே, பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டு டிக்கெட் பதிவு செய்வதும், ரத்து செய்ய வேண்டியிருந்தால் அதிக நேரத்திற்கு முன்பாகவே செய்வதும் நல்லது. இந்தப் புதிய விதிகள் அனைத்து வகுப்பு டிக்கெட்டுகளுக்கும் பொருந்தும்.
இதையும் படிங்க: தவெக வேட்பாளர் பட்டியலில் மாற்றம்..? விஜய் எடுக்கும் அதிரடி முடிவு..! பெரும் எதிர்பார்ப்பு..!!