மாற்றுத்திறனாளிகளை ஒடுக்குவது சர்வாதிகாரப் போக்கு...! திமுகவை கண்டித்த TTV தினகரன்..!
மாற்றுத்திறனாளிகளை ஒடுக்குவது சர்வாதிகாரப் போக்கு என ttv தினகரன் தெரிவித்துள்ளார்.
உதவித் தொகையை உயர்த்தக் கோரி போராடிய மாற்றுத் திறனாளிகளை இரவு முழுவதும் அலைக்கழிப்பதா என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் ttv தினகரன் கேள்வி எழுப்பினார். அவர்கள் மீது அடக்குமுறையை ஏவியிருக்கும் திமுக அரசின் அதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது என்றும் கூறினார்.
மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி சென்னை மாற்றுத்திறனாளிகள் ஆணையரகத்தில் தொடர் போராட்டம் நடத்தி வந்த மாற்றுத்திறனாளிகளைப் பேருந்தில் ஏற்றி இரவு முழுவதும் அலைக்கழித்ததோடு அவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனின் மனைவியும், மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவருமான தஜான்சிராணி உட்பட பலர் காயமடைந்திருப்பதாக வெளியாகும் தகவலை சுட்டிக்காட்டி உள்ளார்.
கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மிகக்குறைவான உதவித் தொகையை வழங்கி வஞ்சித்து வரும் திமுக அரசு, தற்போது அதனை உயர்த்தி வழங்கக் கோரி போராடும் மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிப்பதும், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக் கூடச் செய்து தராமல் சித்ரவதை செய்வதும் கடும் கண்டனத்திற்குரியது என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சீரழிக்கும் கஞ்சா... திராவிட மாடல் சாதனையா? கிழித்து தொங்கவிட்ட TTV..!
தங்களின் வாழ்வாதார கோரிக்கையை முன்னிறுத்தித் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாற்றுத்திறனாளிகளை அழைத்துப் பேசி, உரிய தீர்வை ஏற்படுத்தித் தர வேண்டிய திமுக அரசு, தங்களிடம் இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களை அடக்கி ஒடுக்க நினைப்பது முழுக்க முழுக்க சர்வாதிகாரப் போக்கையே வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது என்றும் சாடினார்.
எனவே, காவல்துறையால் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் உரிய சிகிச்சை வழங்கிடுவதோடு, நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி அறிவித்திட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: தமிழ் கலாச்சாரம் அழிய தமிழ் நில மன்னர்களா காரணமா? ஸ்டாலினை கேட்க தெம்பு இருக்கா? திருமா.வுக்கு TTV கண்டனம்..!