தமிழ் கலாச்சாரம் அழிய தமிழ் நில மன்னர்களா காரணமா? ஸ்டாலினை கேட்க தெம்பு இருக்கா? திருமா.வுக்கு TTV கண்டனம்..!
தமிழ் நில மன்னர்கள் குறித்த திருமாவளவன் பேச்சுக்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருமாவளவன் அவர்களின் தமிழ் நில மன்னர்கள் குறித்த பேச்சு சமீபத்தில் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான அவர், ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது தமிழகத்தின் பழங்கால மன்னர்களான சேரர், சோழர், பாண்டியர், பல்லவர் போன்றவர்களை கடுமையாக விமர்சித்தார். அவரது கருத்துகள் தமிழ் மொழியும் தமிழ் கலாச்சாரமும் அழிவதற்கு இந்த மன்னர்களே முக்கிய காரணம் என்று சுட்டிக்காட்டியது.
தமிழும், தமிழ் கலாச்சாரமும் அழிய தமிழ் நில மன்னர்கள் தான் காரணமா என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பினார். வரலாற்று சிறப்புமிக்க தமிழ் மன்னர்களின் மீது அவதூறுகளை அள்ளி வீசக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேச்சுக்கு தனது கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.
தமிழ் அழிவதற்கும், தமிழ் கலாச்சாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் வருத்தமளிக்கிறது என்று கூறியுள்ளார். தமிழர்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டுக் கலாச்சாரத்தையும் போற்றிப் பாதுகாத்து, வீரத்தின் விளைநிலமாக தமிழகத்தை மாற்றி இன்றளவும் தெய்வங்களுக்கு இணையாகப் போற்றப்படும் தமிழ்நில மன்னர்கள் குறித்த திருமாவளவன் அரைவேக்காட்டுத்தனமான பேச்சு கடும் கண்டனத்திற்குரியது என்றும் கூறினார்.
இதையும் படிங்க: ஊழலில் மூழ்கிய தமிழகம்..! அடுக்கு மொழி முதல்வர்..! பிரச்சனைகளை லிஸ்ட் போட்ட TTV..!
ராஜராஜன் தமிழ்ப் பெயரா., ராஜேந்திரன் தமிழ்ப் பெயரா., என பொதுவெளியில் கேள்வி எழுப்பும் திருமாவளவன், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் பெயர்கள் தமிழ்ப்பெயரா என கேட்கும் தைரியமும், துணிச்சலும் இருக்கிறதா என்ற கேள்வி தமிழர்கள் அனைவரின் மத்தியிலும் இந்நேரத்தில் எழுந்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். திமுகவையும், அதன் தலைவர்களையும் திருப்திப்படுத்துவதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்நில மன்னர்கள் மீது அவதூறுகளை அள்ளிவீசுவதை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: டிடிவி- க்கு பயம்... NDA இயற்கைக்கு முரணான கூட்டணி..! செல்வப்பெருந்தகை விமர்சனம்..!