திமுக அரசுக்கு திறமையில்ல... அரசு பணி கானல் நீர் தான்..! TTV தினகரன் விமர்சனம்..!!
கூட்டுறவுத்துறை தேர்வர்கள் கைது செய்யப்பட்டதற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்தார்.
கூட்டுறவுத்துறை சார்பாக நடைபெற்ற போட்டித் தேர்வு முடிவுகளை வெளியிடக் கோரி போராடிய தேர்வர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்தார். அரசுப்பணியை எதிர்பார்த்து காத்திருக்கும் இளைஞர்களின் எதிர்காலத்தை தொடர்ந்து கேள்விக் குறியாக்கும் திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மை கடும் கண்டனத்திற்குரியது என்றும் கூறியுள்ளார்.
கூட்டுறவுத்துறையில் உதவியாளர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற போட்டித் தேர்வுகளின் முடிவுகளை வெளியிடக் கோரி சென்னை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகம் முன்பாக போராடிய தேர்வர்கள் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டிருப்பதாக சுட்டி காட்டினார்.
கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்வுக்கான முடிவுகளை தற்போது வரை வெளியிடாமல் காலம் தாழ்த்திக் கொண்டிருக்கும் திமுக அரசு, அத்தேர்வு முடிவுகளை வெளியிடக் கோரி ஜனநாயக ரீதியில் போராடிய தேர்வர்கள் மீது காவல்துறையின் மூலம் அடக்குமுறையை ஏவியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்றார்.
இதையும் படிங்க: AI மாநாட்டில் அத்துமீறல்..! ஒட்டுமொத்த இந்தியாவுக்கே அவமானம்..!! இளைஞர் காங்கிரஸுக்கு டிடிவி தினகரன் கண்டனம்..!!
திமுகவின் தேர்தல் அறிக்கையில் 185வது வாக்குறுதியாக ஆண்டுதோறும் பத்து லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும், 187வது வாக்குறுதியாக அரசுத்துறைகளில் நிலவும் 3.5 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் வாய்க்கு வந்ததையெல்லாம் வாக்குறுதியாக கொடுத்த திமுக, ஆட்சிக்கு வந்த ஐந்து ஆண்டுகளில், அரசுத்தேர்வுகளை முறையாக நடத்த முடியாமலும், முடிந்த தேர்வுகளுக்கான முடிவுகளைக் கூட வெளியிட முடியாமலும் திணறிக் கொண்டிருப்பதால் லட்சக்கணக்கான இளைஞர்களின் அரசுப் பணி கனவு கானல் நீராகவே மாறும் சூழல் உருவாகி இருப்பதாக தெரிவித்தார்.
எனவே, காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட தேர்வர்களை எந்தவித நிபந்தனைகளுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, கூட்டுறவு பணியாளர்களுக்கான போட்டித் தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார்.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகளை ஒடுக்குவது சர்வாதிகாரப் போக்கு...! திமுகவை கண்டித்த TTV தினகரன்..!