வீட்ல கூட பாதுகாப்பில்ல..! புரையோடும் கஞ்சா...! TTV தினகரன் காட்டம்..!!
பெண்களுக்கு வீட்டில் கூட பாதுகாப்பு இல்லை என்றும் கஞ்சா பழக்கம் புரையோடி கிடப்பதாகவும் டிடிவி தினகரன் குற்றம் சாட்டினார்.
மீஞ்சூர் அருகே வீட்டிலிருந்த கல்லூரி மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொடூரத் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் கேள்விக்குறியான பெண்களின் பாதுகாப்பு தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியில் உறுதியாக மீட்டெடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே தனது வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியிடம், கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் சிலர் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டதோடு, கண்மூடித்தனமான தாக்குதலையும் அரங்கேற்றியதில் அம்மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக கூறி உள்ளார்.
தலைநகர் சென்னையில் தொடங்கி கடைக்கோடி கிராமங்கள் வரை கட்டுப்படுத்தவே முடியாத அளவிற்கு புரையோடிப் போயிருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களால் சாலைகள், பேருந்து, ரயில் நிலையங்கள், விமானங்களை தொடர்ந்து தன்னுடைய சொந்த வீட்டில் கூட பாதுகாப்பாக இருக்க முடியாத சூழல் தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது என்றார்.
இதையும் படிங்க: ஜெயிச்சே தீருவோம்... டிடிவி தினகரன் சூறாவளி பிரச்சாரம்..! முழு விவரம்..!!
பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்யப்படும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களால் அவர்களின் எதிர்காலம் வீணாவதோடு, அந்த கொடிய வகைப் போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களால் அரங்கேற்றப்படும் கொலை, கொள்ளைகளும், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளின் அடையாளமாக தமிழகத்தை மாற்றி இருப்பதாக கூறியுள்ளார். எனவே, கல்லூரி மாணவி மீது கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: 210 தொகுதிகளில் நாங்க தான்..!! டெல்லி-னாலே ஸ்டாலினுக்கு பயம்..! தொகுதி பங்கீட்டுக்கு பிறகு இபிஎஸ் சூளுரை..!!