கேக்கவே மாட்டீங்களா? அப்படி என்ன அவசரம்… TRB தேர்வு விவகாரத்தில் தலையிட்ட டிடிவி…!
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வை நடத்தி முடிப்பதில் அவசரம் காட்டுவது ஏன் என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழ்நாட்டில் உயர்க்கல்வி ஆசிரியர்களாக பணியமர்த்தப்படுவதற்கான முக்கியமான தேர்வாக டிஆர்பி தேர்வு அறியப்படுகிறது. குறிப்பாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி ஆசிரியர் பதவிகளுக்கு தகுதி பெற உதவுகிறது. இந்த ஆண்டுக்கான முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வைத் தள்ளி வைக்க வேண்டும் என்ற தேர்வர்களின் தொடர் வேண்டுகோளை ஏற்க மறுத்து, அக்டோபர் 12 ஆம் தேதி திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் எனத் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
தேர்வர்கள் தொடர்ந்த வழக்கில் தேர்வுத் தேதியைத் தள்ளிவைப்பது தொடர்பாகப் பரிசீலிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும், திட்டமிட்டபடி தேர்வை நடத்தியே தீருவோம் எனப் பிடிவாதம் பிடிக்கும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயல்பாடுகள் தேர்வர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக அமமுக பொதுச் செயலாளர் ttv தினகரன் தெரிவித்துள்ளார். நடப்பாண்டில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வின் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டிருக்கும் நிலையில், கூடுதல் கால அவகாசம் வழங்கிய பின்னர் தேர்வை நடத்த வேண்டும் எனத் தேர்வர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவதாக சுட்டிக்காட்டினார்.
எனவே, தேர்வர்களின் வேண்டுகோளை ஏற்று அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெற இருக்கும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், புதிய பாடத்திட்டத்திற்கு ஏற்ப தேர்வர்கள் தயாரான பின்னர் தேர்வை நடத்த வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியத்தையும், தமிழக அரசையும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: குற்றவாளி ஞானசேகரனுக்கு குண்டாஸ் தேவையா? பதிலளிக்க ஐக்கோர்ட் உத்தரவு...!