“மயிலாப்பூர் மக்களின் குறைகள் ஒரு வாரத்தில் தீரும்!” - உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமன் அதிரடி!
மயிலாப்பூர் தொகுதி மக்களுக்கு ஆட்டோவில் நின்றபடி நன்றி தெரிவித்த உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமன், ஒரு வாரத்திற்குள் மக்களின் குறைகள் தீர்க்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் வெற்றி பெற்றுத் தமிழக அரசின் புதிய உணவுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள பி. வெங்கட்ராமன், இன்று தனது தொகுதி மக்களுக்கு ஆட்டோவில் நின்றபடி வீதி வீதியாகச் சென்று நன்றி தெரிவித்தார். “மக்களின் அடிப்படைத் தேவைகளைக் குறித்து வைத்துள்ளேன், இன்னும் ஒரு வாரத்திற்குள் அனைத்திற்கும் தீர்வு காணப்படும்” என்று அவர் தொகுதி மக்களுக்கு அதிரடி உத்திரவாதம் அளித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு அசாத்திய வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளரும் புதிய உணவுத்துறை அமைச்சருமான பி. வெங்கட்ராமன், இன்று ராஜா அண்ணாமலைபுரம் மற்றும் மயிலாப்பூர் 171-ஆவது வார்டு பகுதிகளில் வாக்களித்த பொதுமக்களுக்கு நேரில் நன்றி அறிவிப்பு நிகழ்வை நடத்தினார்.
மதிய உணவு விநியோகத்திற்குப் பின் முண்டகக்கண்ணி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர், அங்கிருந்து ஒரு ஆட்டோவில் நின்றபடி பொதுமக்களை நோக்கி கைகூப்பி நன்றி தெரிவித்தார். வழியெங்கும் திரண்டிருந்த பொதுமக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்தும், கட்சி நிர்வாகிகள் மாலை மற்றும் பொன்னாடைகள் அணிவித்தும் தங்களின் உற்சாக வரவேற்பை வெளிப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் வெங்கட்ராமன், தவெக அரசின் அடுத்தகட்ட திட்டங்கள் குறித்துப் பகிர்ந்துகொண்டதாவது:
இதையும் படிங்க: என்னை போராளியாக பாருங்கள்! தோல்வி குறித்து முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உருக்கம்!
தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்ற போதே மயிலாப்பூர் தொகுதி மக்கள் எதிர்கொள்ளும் பட்டா சிக்கல், திருமண மண்டபம், கழிப்பிட வசதி, மற்றும் பள்ளிக்கூட வளாகங்களின் தூய்மை போன்ற பல்வேறு அத்தியாவசியப் பிரச்சினைகளை நான் தனிப்பட்ட முறையில் டைரியில் குறித்து வைத்துள்ளேன். கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பதற்கு முன்பாகவே, தொகுதியில் உள்ள அனைத்துப் பள்ளிக்கூடங்களும் முழுமையாகச் சீரமைக்கப்படும். ஏழை, எளிய மக்களுக்கு மிக முக்கியத் தேவையான உணவு மற்றும் தங்குதடையற்ற விநியோகத்தை உறுதி செய்வதே உணவுத்துறையின் முக்கிய நோக்கமாகும். மயிலாப்பூரில் இதுவரை ரேஷன் அட்டை (Ration Card) இல்லாத தகுதியான குடும்பங்களைக் கண்டறிந்து, அவர்களுக்குப் புதிய அட்டைகளைப் பெற்றுத் தர உடனடி ஏற்பாடுகள் செய்யப்படும்.
மேலும், இப்பகுதியில் நீண்ட காலமாகப் பட்டா இல்லாமல் தவித்து வரும் மக்களுக்குப் பட்டா வழங்குவது தொடர்பாகத் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஏற்கனவே அவசர ஆலோசனை நடத்தியுள்ளேன். இன்னும் ஒரு வார காலத்திற்குள் இதற்கான சாதகமான இறுதி முடிவு தெரிந்துவிடும். தாம்பரம் அருகே அண்மையில் நடைபெற்ற இரட்டை கொலைச் சம்பவம் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், இதுகுறித்து உரிய உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்றும், இந்த விவகாரத்தை உடனடியாக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளோம் என்றும் தெரிவித்தார். சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் தவெக அரசு இன்னும் சிறப்பான முறையில் செயல்படும் என்று உறுதியளித்தார்.
இதையும் படிங்க: சிறு பட தயாரிப்பாளர்களின் குரல் ஒடுங்கியது! கே. ராஜன் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல்!