தவெக உட்கட்சி பூசலை சமாளிக்க மிட் நைட் மீட்டிங் வைத்த ஆனந்த்! தவெக நிர்வாகிகளுக்கு அளித்த உத்தரவாதம்!
தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு ஆட்சியிலும் கட்சியிலும் மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தில் மாற்றுக் கட்சியினருக்கு முக்கியத்துவம் அளிப்பது மற்றும் உட்கட்சி பூசல் தொடர்பாக கட்சி நிர்வாகிகளை அழைத்து கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்த் நள்ளிரவில் சமரசப் பேச்சு நடத்தியுள்ளார்.
தமிழகத்தில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை தமிழக வெற்றிக் கழகம் அமைத்துள்ளது. அமைச்சரவையில் கூட்டணிக் கட்சிகளுக்கு நான்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது இந்தக் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் திமுக கூட்டணியில் இருந்தன.
தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிட்டது. கட்சியினர் பலரும் நேரடியாகவும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டனர். கட்சியைப் பலப்படுத்தவும் மக்களிடம் நற்பெயர் எடுக்கவும் இரவுப் பாடசாலை, பால், முட்டை, ரொட்டி திட்டம், இலவச காலை உணவு, பகல் உணவு திட்டங்களைச் செயல்படுத்தியதோடு கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கடுமையாக உழைத்தனர்.
இதையும் படிங்க: கடனில் பொதுத் துறை.! படுகுழியில் தமிழ்நாடு.! பதில் சொல்லுங்க CM.! வேல்முருகன் கேள்வி.!
தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு ஆட்சியிலும் கட்சியிலும் மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. இதனால் உட்கட்சிப் பூசலும் ஆங்காங்கே நடைபெறுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் இடம் பெற இப்போதே மாற்றுக் கட்சியினர் பேரம் பேசத் தொடங்கியுள்ளனர்.
இதற்காகப் பணத்தை வாங்கிக்கொண்டு பலருக்கும் பதவிகளை மாவட்டச் செயலர்கள் வழங்கி வருவதாகவும் இதைக் கட்சித் தலைமை கண்டுகொள்ளவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் அதிருப்தி அடைந்த நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபடும் அளவிற்கு நிலைமை மோசமாகி உள்ளது.
இந்நிலையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கரூர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளைச் சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைமை அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் அழைத்திருந்தனர்.
பொதுச்செயலாளர் ஆனந்த் இரவு 11 மணி முதல் நேற்று அதிகாலை 4.15 மணி வரை அவர்களிடம் பேசி சமாதானம் செய்தார். உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் உட்கட்சிப் பூசலில் ஈடுபடக்கூடாது என அவர்களைக் கண்டித்தார். மேலும் கட்சிக்காக உழைத்த தமிழக வெற்றிக் கழகத்தினருக்கு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அதிகளவில் வாய்ப்பு வழங்கப்படும் என உத்தரவாதம் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: ஓடும் காரில் மாணவிக்கு பாலியல் தொல்லை... தலைமறைவாக இருந்த தவெக நிர்வாகியை கொத்தாக தூக்கிய போலீஸ்...!