×
 

மேகதாது வேண்டாம்.. ராசிமணலில் அணை...! விவசாயிகளுக்காக குரல் கொடுத்த வேல்முருகன்..!!

மேகதாது வேண்டாம்.. ராசி மணலில் அணை கட்ட வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை வேல்முருகன் முன்வைத்துள்ளார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன், மேகதாது அணைத் திட்டத்தைத் தடுத்து நிறுத்தி, தமிழக எல்லைப் பகுதியான ராசிமணலில் அணை கட்ட வேண்டும் என வலியுறுத்தி வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் காவிரி நீர் உரிமையையும் பாதுகாக்கும் நோக்கில், மேகதாது அணைத் திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், ராசிமணலில் அணை அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தமிழகக் காவிரி விவசாயிகள் சங்கம் முன்னெடுத்துள்ள மாநிலம் தழுவிய பிரசாரப் பயணத்தையும் போராட்டத்தையும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார். காவிரி என்பது வெறும் ஒரு நதியின் பெயர் அல்ல. அது தமிழகத்தின் விவசாயம், குடிநீர், உணவுப் பாதுகாப்பு மற்றும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்துடன் நேரடியாகப் பிணைந்த உயிர்நாடி என்று அவர் சுட்டிக்காட்டினார்.

காவிரி நீரை நம்பி விவசாயம் செய்து வரும் தமிழக விவசாயிகளின் உரிமையைப் பாதுகாப்பது, தமிழகத்தின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்குச் சமமானது என்றும் அவர் வலியுறுத்தினார். மேகதாது அணை தொடர்பான முயற்சிகள் தமிழகத்தின் காவிரி நீர் உரிமை குறித்து தொடர்ந்து கவலையை ஏற்படுத்தி வரும் நிலையில், ராசிமணலில் அணை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் முன்வைத்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் மாநிலம் முழுவதும் பிரசாரப் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்தக் கோரிக்கை ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த மக்களின் கோரிக்கை மட்டுமல்ல. காவிரி நீர் கிடைப்பது உறுதி செய்யப்பட்டால்தான் டெல்டா உள்ளிட்ட காவிரி பாசனப் பகுதிகளில் விவசாயம் தொடர்ந்து நடைபெற முடியும். விவசாயம் பாதிக்கப்பட்டால் விவசாயிகள் மட்டுமல்லாமல், விவசாயத் தொழிலாளர்கள், வணிகர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள், உணவு பதப்படுத்தும் தொழில்கள் என விவசாயத்தைச் சார்ந்துள்ள ஒட்டுமொத்த பொருளாதாரமும் பாதிக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.

இதையும் படிங்க: மண் சுரண்டல்..! கொஞ்சம் கூட அக்கறை இல்லையா.? மத்திய அரசை விளாசிய வேல்முருகன்.!

எனவே, தமிழக விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் அலட்சியப்படுத்தாமல், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். காவிரி தொடர்பான பிரச்சினைகளில் தமிழகத்தின் உரிமையைப் பாதுகாக்கவும், ராசிமணலில் அணை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். விவசாயிகளின் போராட்டம் வெற்றி பெறும் வரை அவர்களுடன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கைகோர்த்து நிற்கும் என்றும், காவிரி உரிமையையும் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதற்கான அனைத்து சனநாயகப் போராட்டங்களிலும் உறுதியுடன் துணை நிற்போம் என்றும் அவர் உறுதியளித்தார்.

இதையும் படிங்க: HD குவாலிட்டி வீடியோ வேணுமா.? ரகுபதிக்கு மனசாட்சி இருக்கா..! வீரமணி விஷயத்தில் ராஜ்மோகன் காட்டம்.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share