10 பைசா வாங்க முடியாது..! விமர்சித்து எழுதி கைதான் ஓயும்... அமைச்சர் விக்னேஷ் திட்டவட்டம்..!!
தனக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் பரப்பப்படும் அவதூறுகள் மற்றும் போலி பரப்புரைகளால் ஒன்றும் செய்ய முடியாது என அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
கோவையில் நடைபெற்ற கல்விக் கடன் முகாமில் மது விலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ், ஆட்சியர் பவன்குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விக்னேஷ், தமிழகத்தில் உயர்கல்வி சேர்க்கையில் கோவை மாவட்டம் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து பெருமை சேர்த்துள்ளது. பிளஸ்-2 முடித்த 11,500 மாணவர்களில் 11,250 பேர் உயர்கல்வியில் சேர்ந்து சாதனை படைத்துள்ளனர். மீதமுள்ள 250 மாணவர்களையும் உயர்கல்வியில் சேர்க்க தேவையான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என கூறினார்.
ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பரப்பப்படும் விமர்சனங்கள் குறித்து கேள்விக்கு போலி தகவல்களை பரப்புபவர்கள் தேர்தலுக்கு முன்பே பல முயற்சிகள் செய்து தோற்றுப்போனவர்கள் என்றும் கூறினார். வாங்கிய காசுக்காக சிலரும், அல்லது எங்களிடம் இருந்து எப்படியாவது பணத்தைப் பெற்றுவிடலாம் என்ற எண்ணத்தில் சிலரும் அவதூறுகளை பரப்பி வருகிறார்கள் என்று அமைச்சர் விக்னேஷ் கூறினார்.
தம்மிடம் இருந்து 10 பைசா கூட பெற முடியாது என்றும், எழுதி எழுதி விமர்சிப்பவர்களின் கைதான் ஓயுமே தவிர, மக்கள் பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இதுபோன்ற விமர்சனங்களைப் பற்றி கவலைப்படாது என்றார். டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் மதுபான ஆலைகள் குறித்த கேள்விகளுக்கு விளக்கமளித்த அமைச்சர், கடந்த ஆட்சிக்காலத்தில் நடந்த முறைகேடுகளைச் சீரமைக்கும் பணிகளில் தற்போதைய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பார்ட்டி பண்ட் கிடையாது.. பாட்டில் பண்ட்டுக்கும் குட்பை..!! அமைச்சர் விக்னேஷ் அதிரடி அறிவிப்பு..!!
குறிப்பிட்ட சில ஆலைகளுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்படுவதாகக் கூறப்படும் புகார்களை மறுத்த அவர், மொத்தம் உள்ள 11 ஆலைகளுக்கும் சமமான முறையிலேயே கொள்முதல் ஆணை வழங்கப்பட்டு வருவதாகவும், இதில் எவ்வித பாகுபாடோ அல்லது பழிவாங்கும் நோக்கமோ இல்லை. மேலும், அரசின் முதன்மை நோக்கம் ‘போதையில்லா தமிழகத்தை’ உருவாக்குவதுதான். வரும் 5-ஆம் தேதி சுமார் 4,000 கடைகளுக்கான டெண்டர்கள் திறக்கப்பட்டு டாஸ்மாக் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும் என்று கூறியுள்ளார். அதே போல வெள்ளலூர் பேருந்து நிலைய திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும். மேலும், வெள்ளலூர் குப்பை கிடங்கில் உள்ள கழிவுகள் பயோ-மைனிங் முறையின் மூலம் அடுத்த ஒன்றரை முதல் இரண்டு ஆண்டுகளுக்குள் முழுமையாக அகற்றப்பட்டு அப்பகுதி முற்றிலும் சுத்தமாக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
இதையும் படிங்க: டெங்கு பாதிப்பால் 9 பேர் பலி..! அவ்வளவும் அலட்சியம்..! TTV தினகரன் காட்டம்..!!