×
 

கோவில்களில் செல்போன்களுக்கு தடை..! இதை செய்யலாமே.!! மாற்று ஐடியா கொடுத்த வானதி சீனிவாசன்..!

கோவில்களில் செல்போன்களுக்கு தடை விதிப்பதற்கு பதிலாக கட்டுப்பாடுகள் விதிக்கலாம் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், தமிழ்நாட்டில் உள்ள 52 முக்கிய இந்து திருக்கோவில்களில் செப்டம்பர் 1 முதல் செல்போன் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக தனது கருத்தை வெளியிட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை இந்தத் தடையை அறிவித்துள்ளது. செல்போன்களைப் பாதுகாப்பாக வைக்க சிறப்பு பெட்டகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் வைப்பதற்கு ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய வானதி சீனிவாசன், கோவில்களில் சினிமா பாடல்களுக்கு ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதைத் தடை செய்ய வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்று தெரிவித்தார். அதேநேரம் முற்றிலும் செல்போன்களுக்குத் தடை விதிப்பது பக்தர்களுக்குப் பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்து கோவில்கள் பரந்து விரிந்தவை. சுவாமி தரிசனம் முடித்த பிறகு மண்டபங்கள் மற்றும் வளாகங்களில் அமர்ந்து பேசுவது, பிரசாதம் உண்பது போன்றவை பக்தர்களின் வழக்கமான நடைமுறைகள். குடும்பமாகவோ, உறவினர்களுடனோ, நண்பர்களுடனோ வருபவர்கள் கோவிலுக்குள் வெவ்வேறு இடங்களில் இருக்க நேரிடும். அப்போது அவர்களைத் தொடர்புகொள்ள செல்போன் அவசியமாகிறது. குறிப்பாக வயதானவர்களுடன் குழுவாகச் செல்பவர்களுக்கு இந்தத் தடை பெரும் சிரமத்தை உருவாக்கும்.மேலும் பல பக்தர்கள் கோவிலின் கட்டடக் கலை அம்சங்களையும் சிற்பங்களையும் புகைப்படம் எடுத்து நினைவாக வைத்துக்கொள்கிறார்கள்.

இதையும் படிங்க: தமிழக பாஜக தலைமை மாற்றமா? வானதி சீனிவாசனுக்கு பதவி? டெல்லியில் தீவிர ஆலோசனை!!

அவற்றை சமூக ஊடகங்களில் பதிவிடுவதன் மூலம் அந்தக் கோவிலின் கலைச் சிறப்பையும் ஆன்மிக முக்கியத்துவத்தையும் மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துகிறார்கள். முழுமையான செல்போன் தடை இவற்றையெல்லாம் தடுத்துவிடும்.எனவே கோவில்களில் செல்போனுக்கு முழுமையாகத் தடை விதிக்காமல், மூலஸ்தானத்தில் மட்டும் தடை விதிப்பது அல்லது மூலஸ்தானத்தை மட்டும் படம் எடுக்கத் தடை விதிப்பது போன்ற கட்டுப்பாடுகளைக் கொண்டுவரலாம் என்று வானதி சீனிவாசன் பரிந்துரைத்தார். செல்போன் கொண்டு செல்லவே முழுத் தடை விதிப்பது பக்தர்களுக்குத் தேவையற்ற மனஉளைச்சலை ஏற்படுத்தும். இதைக் கவனத்தில் கொண்டு இந்து சமய அறநிலையத்துறை செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

இதையும் படிங்க: சட்டமன்றத்தில் கன்னிப் பேச்சு என்பதற்கு பதில் அறிமுக உரை! அமைச்சர் ராஜ்மோகனுக்கு வானதி சீனிவாசன் நன்றி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share