அரிசி விலை உயர்வு விவகாரம்: உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த தவெக ஐடி விங்!
அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த 25 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி நாளை அமுதம் அங்காடிகளில் கிலோ ரூ 30க்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தவெக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நிலவும் சன்னரக அரிசி விலை உயர்வு விவகாரத்தில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் விமர்சனத்துக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அதிகாரப்பூர்வ ஐடி விங் காரசாரமான பதிலடி கொடுத்துள்ளது. மேலும், விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் உள்ள அமுதம் அங்காடிகள் மூலம் கிலோ ரூ.30-க்கு அரிசி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
முன்னதாக, தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்ந்துவிட்டதாகவும் தவெக அரசு நிர்வாகத்தில் தோல்வி அடைந்துவிட்டதாகவும் நாளிதழ் செய்தியை மேற்கோள் காட்டி உதயநிதி ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் விமர்சித்திருந்தார்.
இதற்குப் பதிலளித்து தவெக ஐடி விங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது காலநிலை மாற்றத்தின் காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும் சன்னரக அரிசியின் விலை சந்தையில் உயர்ந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் உடனடியாக முதலமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளார்.
இதையும் படிங்க: மெட்ரோ பள்ளம் முதல் போதைப்பொருள் வரை பொறுப்பேற்பாரா? திமுக-வை வறுத்தெடுத்த தவெக ஐடி விங்!
முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை மாநிலம் முழுவதும் உள்ள அமுதம் அங்காடிகள் மூலம் குறைந்த விலையில் வழங்க அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது.
அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்காகத் தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் ஒரு லட்சம் மெட்ரிக் டன் அரிசியை உடனடியாகக் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக, நாளை முதல் 25,000 மெட்ரிக் டன் அரிசி அனைத்து அமுதம் அங்காடிகளுக்கும் அனுப்பப்பட்டு, கிலோ ரூ.30 என்ற மானிய விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.
உற்பத்திக் குறைவு ஒருபுறம் இருக்க, அரசியல் நோக்கத்தோடு செயல்படும் சில ஆலை உரிமையாளர்கள் அரிசியைப் பதுக்கி வைப்பதும் விலையேற்றத்துக்கு முக்கியக் காரணமாகும். இத்தகைய பதுக்கல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
நாளிதழ் செய்தியைச் சுட்டிக்காட்டி விமர்சித்த உதயநிதி ஸ்டாலின், அதே செய்தியின் தலைப்பில் இடம்பெற்றிருந்த "எல் நினோ தாக்கத்தால் உற்பத்தி குறைவு" என்ற காரணத்தைக் கவனிக்கத் தவறிவிட்டார். எதார்த்த நிலையைப் புரிந்து கொள்ளாமல் அரசியல் ஆதாயத்துக்காக அவசரகதியில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது கண்டிக்கத்தக்கது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆத்தாடி..!! இனி அரிசி விலை கிலோ ரூ.100-யை தாண்டுமாம்... இல்லத்தரசிகள் தலையில் இடியை இறக்கிய வியாபாரிகள்... காரணம் என்ன?