சூடுபிடிக்கும் அரசியல் களம்..!! அடுத்து திருச்சியா..?? விஜய் போடும் மாஸ்டர் பிளான் இதுதான்..!!
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், திருச்சியில் தவெக தலைவர் விஜய் மாநாடு நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சி என்றாலே தமிழக அரசியலில் திருப்புமுனை ஏற்படும் இடம் என்பது வரலாற்று உண்மை. இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் தீவிரமடைந்த இடம் இதுவே. 1957 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) போட்டியிட வேண்டுமா என மக்கள் கருத்து கேட்கப்பட்ட முதல் மாவட்டம் திருச்சி. 1972-ல் எம்.ஜி.ஆர். திமுகவிலிருந்து வெளியேறிய பின்னர் முதல் பொதுக்கூட்டத்தை நடத்தி மக்களிடம் நியாயம் கேட்டதும் இங்குதான். இத்தகைய வரலாற்றுப் பின்னணியுடன், தமிழகத்தின் மையப் பகுதியில் அமைந்திருப்பதால் தொண்டர்களை ஒருங்கிணைப்பதற்கு ஏற்ற இடமாக திருச்சி விளங்குகிறது.
இதனாலேயே அரசியல் கட்சிகள் தங்கள் முக்கிய மாநாடுகள், பொதுக்கூட்டங்களை இங்கு நடத்தி வருகின்றன. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே திருச்சி அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி நாம் தமிழர் கட்சி (நாதக) சார்பில் திருச்சியில் மாபெரும் மாநாடு நடைபெற்றது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகப்படுத்தினார். இந்த நிகழ்வு கட்சியின் தேர்தல் தயாரிப்புகளுக்கு பெரும் உற்சாகத்தை அளித்தது.
இதையும் படிங்க: அகற்றப்பட்டது ஆதிக்க வெறியின் ஆணவமும்தான்! இந்தி பெயர் நீக்கம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆவேசம்!
அடுத்ததாக, வரும் 9-ஆம் தேதி (திங்கள்கிழமை) திருச்சி சிறுகனூர் பகுதியில் திமுகவின் 12-வது மாநில மாநாடு நடைபெறவுள்ளது. முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இந்த மாநாட்டில் சுமார் 10 லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. "ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்" என்ற தலைப்பில் நடைபெறும் இந்த பிரமாண்ட நிகழ்வு, 500 ஏக்கர் பரப்பளவில் ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
தேர்தலில் திமுகவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதைத் தொடர்ந்து, 11-ஆம் தேதி (புதன்கிழமை) பஞ்சப்பூர் அருகே தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ.) சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர். இந்த கூட்டம் தமிழகத்தில் தேசிய கட்சிகளின் செல்வாக்கை வலுப்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளது.
மேலும், தமிழக வெற்றிக்கழகம் (தவெக) சார்பில் இந்த மாத இறுதியில் திருச்சியில் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான இந்தக் கட்சியின் மூன்றாவது மாநில மாநாடாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேட்பாளர்கள் அறிமுகம், தேர்தல் அறிக்கை வெளியீடு உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் இதில் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்த மாநாடு தவெகவுக்கு திருப்புமுனையாக அமையும் என கட்சியினர் நம்புகின்றனர்.
திருச்சியின் வரலாற்று முக்கியத்துவத்தால், பிரதான கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்டவை இங்கு நடத்திய மாநாடுகள் அவற்றுக்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளன. அதே போல, இப்போது நாதக, திமுக, என்.டி.ஏ. மற்றும் தவெக ஆகியவை திருச்சியை இலக்காகக் கொண்டு அடுத்தடுத்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. தேர்தல் நெருங்கும் நிலையில், போட்டி போட்டியாக பலத்தை நிரூபிக்கும் இந்த அரசியல் நடவடிக்கைகளால் திருச்சியில் கோடைக்கு முன்பே அரசியல் அனல் பறக்கத் தொடங்கிவிட்டது.
இதையும் படிங்க: இந்தி திணிப்பு புகாருக்கு இடம் கொடுக்காதீர்கள்! - ரயில்வே அமைச்சருக்கு தமிழிசை சௌந்தரராஜன் கடிதம்!