#BREAKING: தவெக நிர்வாகி அஜிதா தற்கொலை முயற்சி! உழைத்த கட்சியே துரோகி என்றதால் விபரீதம்!
தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகி அஜிதா, தூக்க மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தான் விசுவாசமாக உழைத்த கட்சியிலேயே தன்னை 'மாற்றுக் கட்சியின் கைக்கூலி' என்று விமர்சித்ததால் ஏற்பட்ட மன உளைச்சலே இந்த விபரீத முடிவுக்குக் காரணம் என அவரது குடும்பத்தினர் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகி அஜித்தா, இன்று தனது இல்லத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தனது கணவர் தூங்குவதற்காக வைத்திருந்த தூக்க மாத்திரைகளில், சுமார் 15-க்கும் மேற்பட்ட மாத்திரைகளை அவர் ஒரே நேரத்தில் உட்கொண்டதாகத் தெரிகிறது. இதனை அறிந்த அவரது குடும்பத்தினர், உடனடியாக அவரை வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு மருத்துவமனையில் முதலுதவிக்காக அனுமதித்தனர்.
அஜிதாவின் உடல்நிலை கவலைக்கிடமானதைத் தொடர்ந்து, அவர் மேல் சிகிச்சைக்காகத் தூத்துக்குடியில் உள்ள ஏ.வி.எம் (AVM) மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் குழாய் மூலம் அஜித்தாவின் வயிற்றில் இருந்த மாத்திரைகளை வெளியே எடுக்க முயற்சி செய்ததாகவும், ஆனால் அவை வெளியே வரவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, தற்போது அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுத் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலை.யில் அதிர்ச்சி: ஆய்வகத்தில் வெடித்த கண்ணாடிக் குடுவை; 2 மாணவர்கள் படுகாயம்!
இந்தத் தற்கொலை முயற்சி குறித்து அஜிதாவின் குடும்பத்தினர் கூறுகையில், "அஜிதா தான் சார்ந்திருந்த கட்சிப் பணிகளுக்காக மிகவும் அர்ப்பணிப்புடன் உழைத்து வந்தார். ஆனால், கட்சி நிர்வாகிகள் சிலர் அவரை 'மாற்றுக் கட்சியின் கைக்கூலி' என்று பழி சுமத்தி விமர்சித்துள்ளனர். தான் உண்மையாக உழைத்த கட்சியிலேயே தனக்கு இப்படி ஒரு அவப்பெயர் ஏற்பட்டதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அந்த மன உளைச்சலால்தான் அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்" எனத் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: #BREAKING: TVK நிர்வாகி அஜிதா ஆக்னல் தற்கொலை முயற்சி...! பரபரப்பு...!