அரசுப் பள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய தவெக நிர்வாகி... அதிகாரி போல் ஆய்வு செய்ததால் சர்ச்சை...!
அரசுப் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு வெற்றிக் கழக (தவெக) மாவட்ட துணைச் செயலாளர் அகிலன் பிறந்தநாள் விழாவை கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு, அக்கட்சியின் எம்எல்ஏக்கள் தொகுதிகளில் தீவிர கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். சாலைகள், குடிநீர் திட்டங்கள், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் என பல்வேறு இடங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தி அதிகாரிகளுக்கு உத்தரவுகள் வழங்கி வருகின்றனர்.
அவர்களைப் போல் ஆய்வு நடத்துகிறேன் என்ற பெயரில் அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்களில் கையில் கேமராவுடன் தவெக நிர்வாகிகள் அட்ராசிட்டியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் பிரதிநிதி அல்லாத தவெகவினர், அரசு விவகாரங்களில் தலையிடுவது மக்களிடையே கடும் அதிருப்தியையும், அரசு ஊழியர்களுக்கு நெருக்கடியையும் ஏற்படுத்தியது.
இதனையடுத்து மக்கள் பிரதிநிதி அல்லாதவர்கள், அரசு விவகாரங்களில் தலையிடக்கூடாது என்று தவெக பொதுச் செயலாளரும். அமைச்சருமான என்.ஆனந்த் கோரிக்கை விடுத்தார். அதன்பிறகும் தவெக நிர்வாகிகள் அரசு அலுவலகங்களில் அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக அரசு ஊழியர்கள் சார்பில் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
இதையும் படிங்க: "உங்களுக்கு மாமா, எங்களுக்கு அண்ணன்"... விஜய் போட்டோவுடன் வகுப்பறைக்குள் நுழைந்த தவெகவினர்... ரீல்ஸ் வெறியால் செய்த அட்ராசிட்டி...!
இதனிடையே, அரசுப் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு வெற்றிக் கழக (தவெக) மாவட்ட துணைச் செயலாளர் அகிலன் பிறந்தநாள் விழாவை கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், குன்னலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அவர் ஆய்வு மேற்கொண்டதும் கேள்விகளை எழுப்பியுள்ளன. மக்கள் பிரதிநிதி அல்லது அரசு அதிகாரி அல்லாத ஒருவர் பள்ளி நிர்வாகம் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டது குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தவெக நிர்வாகி அகிலன், தனது கட்சியினருடன் முத்துப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட குன்னலூர் ஊராட்சி எக்கல் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது பள்ளியின் குடிநீர் வசதி, கட்டிடங்களின் பராமரிப்பு உள்ளிட்ட அம்சங்களை பார்வையிட்டு ஆய்வு செய்ததாக கூறப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியுள்ளன. அதிகாரப்பூர்வ பொறுப்பு ஏதும் இல்லாத நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுவதால் அது சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது.
மேலும், இடும்பாவனம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அகிலன் தனது பிறந்தநாளை கட்சி நிர்வாகிகளுடன் கேக் வெட்டி கொண்டாடியதாக கூறப்படும் வீடியோவும் இணையத்தில் வைரலாகியுள்ளது. அரசு கல்வி நிறுவன வளாகத்தில் இத்தகைய நிகழ்வு நடைபெற்றது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆளுங்கட்சியுடன் தொடர்புடைய நிர்வாகி என்பதன் அடிப்படையில் அதிகாரத் தாக்கத்தை வெளிப்படுத்தும் செயலாக இது பார்க்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் மற்றும் சில சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு முன்வைத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: Mr.விஜய்...! 'டீலா... நோ டீலா?' - தவெகவில் இணைய விஜயபாஸ்கர் வைத்த டிமாண்ட்... என்ன தெரியுமா?