×
 

சட்டசபை நேரலையால் அழு அழுவென அழுகிறார்கள்!! அமைச்சர் கீர்த்தனா விமர்சனம்!

சட்டசபையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் என்ன பேசுகின்றன என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே நேரலை ஒளிபரப்பு செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.

சிவகாசியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பேசிய அரசியல் கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. முதல்வர் விஜய்யின் மேஜையில் இருக்கும் 3 முக்கிய கோப்புகள் திறக்கப்பட்டால், யார் துபாய்க்கு சென்று தலைமறைவாகப் போகிறார்கள் என்பது தெரியவரும் என அவர் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் கீர்த்தனா, தேர்தல் பிரசாரத்தின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதாக தெரிவித்தார். தன்னை களங்கப்படுத்தும் நோக்கில் திமுக மற்றும் அதிமுகவினர் தொடர்ந்து பொய் பிரசாரம் செய்து வருவதாக குற்றம்சாட்டிய அவர், இதுபோன்ற விமர்சனங்களை தவெக பொருட்படுத்தாது என்றும் கூறினார்.

மக்களுக்கு தேவையான பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும், உள்ளாட்சித் தேர்தலிலும் தவெக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாகவே, முதல்வர் விஜய்யின் மேஜையில் இருக்கும் மூன்று கோப்புகள் குறித்து பரபரப்பான கருத்தை முன்வைத்தார்.

இதையும் படிங்க: விஜய் பிரதமரா? இன்னும் ரசிகர் மன்ற Mode-ல்தான் இருக்கிறார்கள்! தவெக அமைச்சர்களை கிண்டல் செய்த மாணிக்கம் தாகூர்

தவெக ஆட்சிக்கு வருவதற்கு முன்பும் விமர்சனங்கள் இருந்ததாகவும், ஆட்சிக்கு வந்த பிறகும் தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாகவும் கீர்த்தனா கூறினார். மக்களுக்கு சேவை செய்வதை தடுக்கவே எதிர்க்கட்சிகள் தொடர்ந்து ஏதாவது ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து வருவதாகவும் அவர் விமர்சித்தார்.

சட்டசபை நேரலை குறித்தும் அமைச்சர் பேசினார். முன்பு தொலைக்காட்சிகளில் நாடகங்களை பார்த்த மக்கள், தற்போது சட்டசபை நிகழ்வுகளை நேரலையில் பார்ப்பதாக அவர் கூறினார். சட்டசபையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் என்ன பேசுகின்றன என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே நேரலை ஒளிபரப்பு செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.

சட்டசபை நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்பக்கூடாது என சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறிய அவர், 2021 தேர்தலின்போது சட்டசபை நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்புவோம் என திமுக வாக்குறுதி அளித்திருந்ததாகவும், அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றும் விமர்சித்தார்.

மேலும், பெண்கள் அரசியலுக்கு வரக்கூடாதா, ஆங்கிலத்தில் பேசக்கூடாதா, கோட் சூட் அணியக்கூடாதா என கேள்வி எழுப்பிய கீர்த்தனா, சாதாரண பின்னணியில் இருந்து ஒருவர் கோட் சூட் அணிந்து அரசியலுக்கு வந்தாலும் எதிர்க்கட்சிகள் விமர்சிப்பதாக குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க: இனி அண்ணா அறிவாலயத்தை வாடகைக்கு விடும் நிலை வரும்! திமுகவை விஜய் ஒழித்துக் கட்டிவிட்டார்! அமைச்சர் நிர்மல்குமார் விமர்சனம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share