100% ரெடி..! மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு..!! ஏற்பாடுகள் தயார் என அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி..!!
மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் பன்னெடுங்காலமாக எதிர்பார்க்கப்பட்ட மகா குடமுழுக்கு விழா வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி காலை வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற கடைசி குடமுழுக்குக்குப் பிறகு சுமார் 17 ஆண்டுகள் கழித்து இந்தப் புனித நிகழ்வு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. ஆகம மரபுப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற வேண்டிய இந்த விழா, கோயிலில் மேற்கொள்ளப்பட்ட விரிவான திருப்பணிகளுக்குப் பிறகு இப்போது முழுமையாக தயாராகியுள்ளது.கோயில் வளாகத்தில் மொத்தம் 186 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவற்றில் கோயில் நிதியிலும் உபயதாரர்களின் பங்களிப்பிலும் பல கோடி ரூபாய் செலவில் கோபுரங்கள், விமானங்கள், மண்டபங்கள், சிற்பங்கள் மற்றும் பிற முக்கிய பகுதிகள் புதுப்பொலிவு பெற்றுள்ளன. வெள்ளியம்பல நடராஜர் சபை முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. சன்னதி வாசல்கள் வெள்ளி அலங்காரங்களுடன் ஜொலிக்கின்றன. மூலஸ்தானத்தில் உள்ள தங்கத் தகடுகளும் புதுப்பிக்கப்பட்டுள்ளன. உலோக விக்ரகங்களும் சிறப்பாக பராமரிக்கப்பட்டுள்ளன. பூக்களால் கோபுரங்கள் மற்றும் சன்னதிகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கோயில் முழுவதும் தங்கம் மற்றும் வெள்ளி அலங்காரங்களால் கண்ணைக் கவரும் வகையில் தயாராகியுள்ளது.குடமுழுக்குக்கு முன்னோடியாக பூர்வாங்க பூஜைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.
யாகசாலை பூஜைகள் பல நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சுமார் நானூறு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களுடன் ஹோமங்களை நடத்தி வருகின்றனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா நாளை நடைபெற உள்ள நிலையில் அமைச்சர்கள் ரமேஷ், நிர்மல் குமார், மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர், அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் இணைந்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: “தற்குறிக்கு ஓட்டு போட்டீங்களே... விஜய் உங்களுக்கு என்ன செய்தார்?”... தவெகவை விளாசிய செல்லூர ராஜூ...!
ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு அமைச்சர்கள் ரமேஷ் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் குடமுழுக்கு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு இருக்கிறது என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார். குடமுழுக்கு ஏற்பாடு 100% நிறைவு பெற்றிருப்பதாகவும் நல்லபடியாக நடத்தப்பட வேண்டும் என அனைவருடைய எண்ணம் இருப்பதாகவும் தெரிவித்தார். குடமுழுக்கு விழாவின் போது மின்வெட்டு ஏற்படாத அளவிற்கு மின்சார துறையினர் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். குடமுழுக்கு விழாவுக்காக 6500 போலீசார் பாதுகாப்பு பணியில் சுழற்சி முறையில் ஈடுபட்டு இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: "ஏய் ஜெயிலுக்குப் போறேன்... ஜெயிலுக்குப் போறேன் "... போலீசிடம் வாண்டடாக வம்பிழுத்த தவெக நிர்வாகி கணவர்...!