அதிமுக முக்கிய பிரமுகர்கள் தவெகவில் ஐக்கியம்... செங்கோட்டையன் உறுதி...!
அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணைவார்கள் என செங்கோட்டையன் தெரிவித்தார்.
தமிழக அரசியல் களத்தில் சமீப காலமாக பரபரப்பை ஏற்படுத்திய ஒரு முக்கிய நிகழ்வு, அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது. நவம்பர் 27 அன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமையகத்தில் விஜய் முன்னிலையில் இணைப்பு நிகழ்வு நடைபெற்றது.
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் இருந்து வந்த செங்கோட்டையன், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து, தவெகவில் இணைந்தது தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. இது போலவே, அதிமுகவின் பிற முக்கிய பிரமுகர்களும் தவெகவில் இணைவார்கள் என்ற கருத்து பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.செங்கோட்டையனின் இணைப்பு தவெகவுக்கு குறிப்பிடத்தக்க பலத்தை அளித்துள்ளது.
எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து அரசியலில் இருக்கும் அவர், ஜெயலலிதா அமைச்சரவையில் பல்வேறு துறைகளை கையாண்டவர். கொங்கு மண்டலத்தில் வலுவான செல்வாக்கு கொண்ட அவரது வருகை, தவெகவின் அமைப்பு ரீதியான வளர்ச்சிக்கு உதவியாக அமையும் என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. உடனடியாக அவருக்கு உயர்மட்ட நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும், மேற்கு மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டது. விஜய் தரப்பில் இது ஒரு மூத்த அரசியல்வாதியின் அனுபவத்தை கட்சிக்கு பயன்படுத்தும் முயற்சியாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: பெரியார் சமத்துவப் பாதையில் சமூகநீதியை வென்றெடுப்போம்... தந்தை பெரியாருக்கு விஜய் மரியாதை...!
செங்கோட்டையன் தானே கூறியது போல, தமிழகத்தில் தூய்மையான ஆட்சி அமைவதற்காகவும், இளைஞர் தலைமையிலான மாற்றத்திற்காகவும் தவெகவில் இணைந்ததாக தெரிவித்தார்.இந்த இணைப்பு அதிமுகவுக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அதிமுகவில் இருந்து முக்கிய பிரமுகர்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணைவார்கள் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் 2 லட்சம் பேர் கலந்து கொண்டதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் TVK-வை வளர்த்ததே அஜிதா தானாம்... துட்டுதான் பெருசு... விஜய் கிட்ட பாசம் இல்ல..! மக்கள் கருத்து..!