மாவட்ட செயலாளர் தலைமறைவு... தவெக நிர்வாகிகள் செல்போன் "SWITCH OFF"...! என்னதான் நடக்குது?
தமிழக வெற்றி கழகத்தின் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜயின் கரூர் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
கரூரில் உள்ள வேலுசாமிபுரத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விஜயை நேரில் காண வந்தனர். போலீஸ் அனுமதி மனுவில் 10 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என்று குறிப்பிட்டிருந்த போதிலும், உண்மையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் திரண்டனர், விஜய் 6 மணி நேரம் தாமதமாக வந்ததால், வெயில் வாட்டும் பகலில் காத்திருந்த மக்கள் சோர்வடைந்தனர். குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிகம் இருந்ததால், 9 வயது சிறுமி ஒருவர் காணாமல் போனதாக வந்த தகவல் கூட்டத்தை இன்னும் குழப்பமானதாக்கியது. இதனால் ஏற்பட்ட அச்சத்தால் மக்கள் ஒரே நேரத்தில் வெளியேற முயன்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
தவெக மாவட்ட செயலாளர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கொலை முயற்சி, கொலை இல்லாமல் மரணம் விளைவித்தல், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் அஜாக்கிரதையாக செயல்படுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தமிழக வெற்றி கழகத்தின் மாவட்டச் செயலாளர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுவதாக தகவல் வெளியான நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமுறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: #BIGBREAKING: விஜய் பிரச்சார கூட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு... உச்சக்கட்ட பதற்றத்தில் கரூர்...!
அது மட்டுமல்லாமல் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகளின் செல்போன்களும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கரூரில் அசம்பாவிதம் நிகழ்ந்ததும் விஜய் சென்னைக்கு புறப்பட்டார். விஜய் எங்கே என கரூர் மக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். வெறும் அறிக்கையை மட்டும் விஜய் வெளியிட்டு கொண்டிருப்பதாகவும், எப்போது வெளியில் வருவார் என்ற கேள்வியும் முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில், மாவட்ட செயலாளர் தலைமறைவாக இருப்பதாக வெளிவரும் செய்திகள் மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளன.
இதையும் படிங்க: இந்த கேள்விய விஜய் கிட்ட கேளுங்க... சட்டென மாறிய உதயநிதி ரியாக்ஷன்...!