உற்சாகத்துடன் தொடங்கிய தவெக செயல்வீரர்கள் கூட்டம்... மொழிப்போர் தியாகிகளுக்கு விஜய் மரியாதை..!
தமிழக வெற்றிக் கழக செயல் வீரர்கள் கூட்டத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு விஜய் மரியாதை செலுத்தினார்.
மாமல்லபுரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம் ஒரு முக்கியமான அரசியல் நிகழ்வாக இன்று நடைபெற்று வருகிறது. தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் உத்திகள், தேர்தல் பணிகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் இடமாக இது அமைந்துள்ளது.
இந்தக் கூட்டம் சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில், ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் தொடங்கியது. கட்சியின் மாநில அளவிலான மற்றும் மாவட்ட அளவிலான முக்கிய செயல்வீரர்கள், நிர்வாகிகள் மட்டுமே இதில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். QR குறியீட்டுடன் கூடிய சிறப்பு அனுமதிச் சீட்டு பெற்றவர்களுக்கு மட்டுமே நுழைவு வழங்கப்பட்டது.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி அமைப்பது குறித்தோ அல்லது தனித்து போட்டியிடுவது குறித்தோ முடிவெடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. விஜய் பல மாதங்களுக்குப் பிறகு பொதுவில் பேசும் வாய்ப்பு இதுவாக இருக்கலாம் என்பதால், அவரது உரைக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே தேர்தல் வியூகங்கள், வாக்காளர் செல்வாக்கு அதிகரிப்பு, அமைப்பு வலுப்படுத்தல் போன்றவை குறித்து ஆழமான விவாதங்கள் நடைபெறும் என்று தெரிகிறது.
இதையும் படிங்க: தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் விஜய்..! யாருடன் கூட்டணி? பரபரப்பு அரசியல் களம்…!
பொதுக்கூட்ட மேடைக்கு விஜய் வந்தவுடன் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். தமிழக வெற்றி கழகத்திற்கு ஒதுக்கப்பட்ட விசில் சின்னத்தை பிரதிபலிக்கும் வகையில் விசில் ஊதி வரவேற்றார்கள். தமிழ்த்தாய் வாழ்த்து, உறுதிமொழி ஆகியவையுடன் நிகழ்ச்சி தொடங்கிய நிலையில், இன்று மொழிப்போர் தியாகிகள் தினம் என்பதால் தியாகிகளின் உருவப்படங்களுக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மலர்த் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கட்சியின் நிர்வாகிகளும் மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினர். பின்னர் அக்கட்சியின் கொள்கை தலைவர்களுக்கும் மரியாதை செலுத்தப்பட்டது.
இதையும் படிங்க: அதிகார திமிரா? தோல்வி பயமா?.. நாங்கள் விதை..! TVK அருண்ராஜ் காட்டம்..!