சட்டம் ஒழுங்கை சரி செய்யுங்க.. இல்ல செய்ய வெப்போம்..! விஜய் ஃபயர் ஸ்பீச்..!
ஆட்சியில் இருந்து செல்வதற்கு முன்பு பரிகாரமாக திமுக சட்டம் ஒழுங்கை சரிசெய்ய வேண்டும் அல்லது சரி செய்ய வைப்போம் என்று விஜய் பேசி உள்ளார்.
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித் குமார் என்பவர், நிகிதா என்ற பெண் கொடுத்த நகை திருட்டு புகார் தொடர்பாக விசாரணை நடத்த அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது காவலர்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்த அஜித்குமார் மரணமடைந்தார். அவரது உயிரிழப்புக்கு நீதி கேட்டு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். சாரி வேண்டாம் நீதி வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதவிகளை கையில் ஏந்தியவாறு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விஜய் பேசியபோது, திமுக அரசை கடுமையாக சாடினார். அது மட்டுமல்லாது ஜெயராஜ் பெனிக்ஸ் வழக்கில் சிபிஐ விசாரணை நடத்துவது தமிழ்நாடு காவல்துறைக்கு அவமானம் என்று கூறிய ஸ்டாலின், தற்போது அஜித் குமார் வழக்கை சிபிஐக்கு மாற்றி இருப்பது தொடர்பாக பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தார். திமுக ஆட்சியில் பல்வேறு பிரச்சனைகள் நடைபெறுவதாகவும் நீதிமன்றத்தின் தலையீடு தொடர்ந்து நடைபெறுவதாகவும் கூறி குற்றச்சாட்டை முன் வைத்தார். திமுக ஆட்சியில் இன்னும் எத்தனை அட்ராசிட்டி நடக்கப் போகிறது என்றும் அண்ணா பல்கலைக்கழக வழக்கு, அஜித் குமார் வழக்கு என அனைத்திலும் நீதிமன்றம் தலையிட்டு கேள்வி எழுப்புவதாகவும், அனைத்திலும் நீதிமன்றம் தலையிடும் என்றால் தமிழகத்தில் ஆட்சியதற்கு, நீங்கள் எதற்கு, உங்களுக்கு பதவியை எதற்கு என்று சரமாரியாக சாடினார்.
மேலும், ஆர்எஸ்எஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் கைப்பாவையே சிபிஐ என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தெரிவித்தார். எப்படி கேட்டாலும் உங்களிடமிருந்து பதில் வரப்போவதில்லை என்று தெரிவித்த விஜய், ஏனென்றால் உங்களிடம் பதிலே இல்லை என்றும் அதிகபட்சமாக சாரிமா, தெரியாமல் நடந்து விட்டது மா என்றுதான் கூறுவீர்கள் என்று தெரிவித்தார். இந்த வெற்று விளம்பர மாடல் திமுக சர்க்கார் தற்போது சாரிமா மாடல் சர்க்காராக மாறிவிட்டது என்று கடுமையாக விமர்சித்த விஜய், இந்த ஆட்சியை விட்டு நீங்கள் செல்வதற்கு முன்பு அதற்கு பரிகாரமாக சட்டம் ஒழுங்கை சரி செய்து ஆக வேண்டும் அல்லது நாங்கள் சரி செய்ய வைப்போம் என்றும் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அதற்கான அனைத்து போராட்டங்களும் முன்னெடுக்கப்படும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: லாக்கப் மரணமடைந்த 24 பேர் குடும்பத்துக்கு கிட்ட சாரி கேட்காதது ஏன்? விஜய் சரமாரி கேள்வி...
இதையும் படிங்க: முதன் முறையாக போராட்டக் களத்தில் விஜய்... கருப்பு நிற உடையில் பங்கேற்பு..!