நாளை குமரி செல்கிறார் தவெக தலைவர் விஜய்..!! பிரச்சாரம் செய்ய இவ்ளோ நேரம் தான் அனுமதியாம்..!!
தவெக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய நாளை கன்னியாகுமரிக்கு செல்கிறார் தவெக தலைவர் விஜய்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி, பிரசாரம் வரும் 21-ஆம் தேதி மாலை வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் இறுதிக் கட்டத்தில் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இரு நகரங்களில் காலை மற்றும் மாலைப் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வாக்காளர்களை சந்தித்து வருகிறார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தினசரி பல தொகுதிகளில் வாகனப் பிரசாரம் மேற்கொண்டு தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து தனது வேட்பாளர்களை மக்களிடம் அறிமுகப்படுத்தி வாக்கு கேட்டு வருகிறார்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் மாநிலம் முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு, தனது கட்சியின் விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். அவரது பிரசாரம் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் வேளையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.
இதையும் படிங்க: உங்க விஜய்.. நான் வரேன்..!! இனி BLAST தான்..!! பெரம்பூர் தொகுதியில் நாளை பிரச்சாரம்..??
கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் மற்றும் பத்மநாபபுரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து விஜய் பிரசாரம் செய்ய உள்ளார். குறிப்பாக, கன்னியாகுமரி அருகே உள்ள விவேகானந்தர் கல்லூரி மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான அனுமதியை கட்சி நிர்வாகிகள் ஏற்கெனவே போலீசாரிடம் கோரியிருந்தனர்.
மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை கோரப்பட்ட அனுமதியில், போலீசார் மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டும் 6 மணி நேரம் அனுமதி வழங்கியுள்ளனர். மேடை அமைப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. விஜய்யின் வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு மற்றும் மேடை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்ய தவெக மாநில நிர்வாகிகள் ஆனந்த் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் இன்று (சனிக்கிழமை) கன்னியாகுமரி மாவட்டத்திற்கு செல்கின்றனர். அவர்கள் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை நேரில் பார்வையிட்டு, தேவையான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட நிர்வாகிகளுக்கு வழிகாட்டுதல்கள் வழங்க உள்ளனர்.
தவெக இளைஞர்கள் மற்றும் தொண்டர்கள் பெரும் எண்ணிக்கையில் கூட்டத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தவெக வலுவான அடித்தளம் அமைக்க முயற்சி செய்து வருவதால், இந்தப் பொதுக்கூட்டம் கட்சியின் பிரசாரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் இறுதி முயற்சியில் ஈடுபட்டுள்ளதால், கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
இதையும் படிங்க: குஷ்பூவுக்கு வந்த அதே கதி தான் விஜய்க்கும்... தவெகவுக்காக அதிமுக கூட்டணிக்குள் குண்டு வைத்த செல்லூர் ராஜூ...!