விசில் சத்தம் காது கிழியுது..! இடையூறு செய்யும் தவெக-வினர்... பொதுமக்கள் குமுறல்..!
பொது இடங்களில் தமிழக வெற்றி கழக தொண்டர்கள் விசில் அடிப்பதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்ட விவகாரம் தமிழ்நாட்டு அரசியலில் மிக முக்கியமான திருப்பமாகக் கருதப்படுகிறது. நடிகர் விஜய் தலைமையிலான இந்தக் கட்சி 2024 பிப்ரவரியில் பதிவு செய்யப்பட்ட பின்னர், 2026 சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிடத் தயாராகி வருகிறது. இந்நிலையில், கட்சிக்கு பொதுச் சின்னம் ஒதுக்க வேண்டும் என கடந்த 2025 நவம்பர் 11-ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்திடம் முறையான மனு அளிக்கப்பட்டது.
தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு பொதுச் சின்னங்களை ஒதுக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தியது. தவெக சார்பில் 10 சின்னங்கள் விருப்பப் பட்டியலாகக் கொடுக்கப்பட்டிருந்தன. அதில் விஜய் முன்னுரிமை கொடுத்த விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஒதுக்கியுள்ளது. இதனால் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் உற்சாகமடைந்தனர்.
பல்வேறு இடங்களில் இனிப்புகள் மற்றும் விசில் உள்ளிட்டவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. ஆனால் அதே விசில் பொதுமக்களுக்கு இடையூறாக அமைந்துவிட்டது. அரசு பேருந்துகள் மற்றும் பொது இடங்களில் விஜய் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் விசில் ஊதி இடையூறு ஏற்படுத்தி வருவதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "விசில்"..! இது அனைத்து மக்களுக்குமான சின்னம்..! TVK நிர்மல் குமார் நெகிழ்ச்சி..!
இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்ட பெண் ஒருவர், தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் விசில் அடித்து இடையூறு செய்வதாகவும் தன்னால் பேசக்கூட முடியவில்லை என்றும் தெரிவித்தார். அவர் பேசிக் கொண்டிருந்தபோதே பின்பக்கத்தில் விசில் சத்தம் காதை கிழிக்கும் வகையில் கேட்டுக் கொண்டிருந்தது. விசில் சின்னம் ஒதுக்கப்பட்டதில் இருந்து விசில் அடித்து அதனை மக்களிடம் ஒன்று சேர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வது புது பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
இதையும் படிங்க: சத்தம் பத்தாது விசில் போடு...! பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் விசில் வழங்கி புஸ்ஸி ஆனந்த் குஷி..!