கரூர் சம்பவத்தில் CBI விசாரணை! விஜய்க்கு நிம்மதி! களமிறங்கியது பாஜக!
கரூரில் நடிகரும் தவெக தலைவருமான விஜய், மக்கள் சந்திப்பு பிரசாரக் கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தை சிபிஐ விசாரணை கோரி தவெக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.
தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) தலைவரும் நடிகருமான விஜய்யின் கரூர் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததுடன், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த துயரச் சம்பவத்திற்கு பின்னால் "சதி" இருப்பதாகக் கூறி, த.வெ.க. சார்பில் சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் இதே கோரிக்கையை முன்பு தள்ளுபடி செய்த நிலையில், இந்த மனு அக்டோபர் 10 (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செப்டம்பர் 27 அன்று, கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் த.வெ.க.வின் முதல் பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம் செய்தார். அனுமதிக்கப்பட்ட 10,000 பேர் எண்ணிக்கையை மீறி, சுமார் 27,000 பேர் கூடியதால் திடீர் நெரிசல் ஏற்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள், த.வெ.க. தொண்டர்கள் உட்பட 41 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.
60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து கரூர், திருச்சி, ஈரோடு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விஜய், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு அறிவித்து, தனது பிரசாரங்களை தற்காலிகமாக நிறுத்தினார்.
இதையும் படிங்க: விஜயை குற்றவாளி ஆக்காதீங்க! திமுகவை வீழ்த்துவதே பொது இலக்கு! அண்ணாமலை சப்போர்ட்!
தமிழக அரசு, இந்த சம்பவத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்தது. இதுதவிர, ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு (SIT) அமைக்கப்பட்டு, காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. பலியானவர்களில் பட்டியலின மாணவர்கள் அதிகம் என்பதால், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையமும் தனியாக விசாரணை நடத்துகிறது. கரூர் மாவட்ட நிர்வாகம், பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 லட்சம் இழப்பீடு அறிவித்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிபிஐ விசாரணை மனு, அக்டோபர் 3 அன்று நீதிபதிகள் எம்.தண்டபாணி மற்றும் எம்.ஜோதிராமன் அமர்வால் தள்ளுபடி செய்யப்பட்டது. "காவல்துறை விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது; சிபிஐ விசாரணை தேவையில்லை" என நீதிமன்றம் கூறியது. மேலும், பொதுக்கூட்டங்களுக்கு புதிய பாதுகாப்பு வழிகாட்டு நெறிகளை (SOP) உருவாக்கவும் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், த.வெ.க. துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "இந்த சம்பவத்தில் சதி உள்ளது. காவல்துறை அரசியல் அழுத்தத்தில் உண்மையை மறைக்கிறது. CCTV காட்சிகளை பாதுகாக்கவும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவும்" எனக் கோரப்பட்டுள்ளது.
கரூர் நீதிமன்றம் உள்ளிட்ட பல நீதிமன்றங்களில் இந்த விவகாரம் தொடர்பாக வழக்குகள் நிலுவையில் உள்ளன. த.வெ.க. தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டாலும், விஜய் மீது இதுவரை வழக்கு இல்லை. இந்த சம்பவம், அரசியல் கூட்டங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் முடிவு, இந்த விவகாரத்தில் முக்கிய திருப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கட்சி கூட்டங்களுக்கு ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ்! லேட்டா வந்தா முடிஞ்சுது கதை! பரிசீலனையில் உள்ள விதிகள்!