ரூ.3.50 கோடியில் மெட்ரோ பூங்கா, விளையாட்டு மைதானம்..! திறந்து வைத்து பார்வையிட்ட துணை முதல்வர் உதயநிதி..!
சென்னை நந்தனத்தில் மெட்ரோ பூங்கா மற்றும் விளையாட்டு மைதானங்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மெட்ரோ இரயில் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மெட்ரோஸ் பூங்கா மற்றும் பூப்பந்து, பிக்கிள் பந்து விளையாட்டு மைதானங்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 3588.08 சதுரமீட்டர் பரப்பிளான திறந்தவெளி நிலத்துடன் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு சொந்தமான நிலப்பகுதியும் உள்ளடக்கி மொத்தம் 3750 சதுரமீட்டர் நிலப்பகுதியில் ரூ.3.50 கோடி செலவினத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் இந்த பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.
பூங்காவினை ஒட்டி விளையாட்டு அரங்குகள் மற்றும் பல்வேறு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. 3 பூப்பந்து விளையாட்டு அரங்குகள் மற்றும் 2 பிக்கிள் பந்து திறந்துவெளி விளையாட்டு அரங்குகள், திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், பூங்காவை சுற்றி 370 மீ நீளம் கொண்ட நடைபகுதி மற்றும் 8 வடிவ நடைபகுதி, பிரத்யேக சிறுவர்கள் விளையாட்டு பகுதி உள்ளிட்டவைகளுடன் உருவாக்கப்பட்டுள்ளன.
மேலும், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள், பொதுமக்கள் குறிப்பாக முதியோர்கள் பயன்பாட்டிற்காக உள் அமர்வு மற்றும் வெளியரங்க அமர்வு பகுதிகள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், பூங்கா பகுதியில் 20 எண்ணிக்கையிலான மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் மற்றும் பூங்காவில் உருவாகும் இலை தழைகளை மக்கி உரமாக்க 3 எண்ணிக்கையிலான கம்போஸ்ட் குழிகள் உருவாக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இளவரசர் வரும் வரை வாடிவாசல் திறக்கக் கூடாதா? உதயநிதியை சீண்டிய ஆர்.பி. உதயகுமார்!
மேலும் பூங்கா மற்றும் விளையாட்டு அரங்குகளை பொதுமக்கள் எவ்வித இடையூறுமின்றி சுதந்திரமாக அணுகி பயன்படுத்திட ஏதுவாக, அண்ணா சாலையினை ஒட்டி பிரத்யேக நுழைவாயில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, மெட்ரோஸ் பூங்கா மற்றும் பூப்பந்து, பிக்கிள் பந்து விளையாட்டு மைதானங்களை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பார்வையிட்டார்.
இதையும் படிங்க: திருச்சியில் ஒரு அலங்காநல்லூர்! சூரியூர் ஜல்லிக்கட்டு மைதானத்தை திறந்து வைத்தார் உதயநிதி!