அறுசுவை பச்சடி போல இனிமை பெருகட்டும்! தெலுங்கு, கன்னட மக்களுக்கு ஈபிஎஸ் யுகாதி வாழ்த்து!
இன்னல்கள் நீங்கி இன்பம் சேரட்டும் என தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரம்மன் உலகத்தைப் படைத்த நாளாகக் கருதப்படும் யுகாதி திருநாளை உவகையுடன் கொண்டாடி மகிழும், உலகெங்கும் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
ராயப்பேட்டையில் உள்ள 'புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.மாளிகை தலைமை அலுவலகத்தில் இருந்து இன்று வெளியிட்டுள்ள இந்த வாழ்த்துச் செய்தியில், மானுட வாழ்வின் தத்துவத்தை மிக அழகாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
வாழ்க்கை என்றாலே மகிழ்ச்சி, கவலை, கோபம், அச்சம், சலிப்பு, ஆச்சரியம் ஆகிய உணர்வுகள் கலந்தது என்பதை உணர்த்தும் வகையில், கசப்புக்கு வேம்பு, துவர்ப்புக்கு மாங்காய், புளிப்புக்கு புளி, உறைப்புக்கு மிளகாய் மற்றும் இனிப்புக்கு வெல்லம் ஆகிய அறுசுவைகள் கொண்ட பச்சடியைச் செய்து, அதனைச் சுவாமிக்கு படைத்தபின் அனைவருக்கும் பரிமாறி மகிழ்வது இப்பண்டிகையின் தனிச்சிறப்பாகும். இந்தப் புதிய ஆண்டில் மக்களின் வாழ்வில் இன்னல்கள் அனைத்தும் நீங்கி, இல்லம்தோறும் இன்பம் பெருக வேண்டும் என்று அவர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மக்களை ஏமாற்றுவதில் திமுக நம்பர் 1 கட்சி! 52 குழுக்கள் அமைத்தும் என்ன பயன்? இபிஎஸ் அதிரடி பேச்சு!
தமிழகத்தில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள், தங்கள் மொழிகளைக் கடந்து சகோதர-சகோதரிகளாக, தமிழர்களின் இன்ப துன்பங்களிலும் பங்கேற்று நகமும் சதையுமாக ஒன்றுபட்டு வாழ்ந்து வருவதை அவர் பெருமிதத்துடன் நினைவு கூர்ந்துள்ளார்.
யுகாதி திருநாளில் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற வேண்டும் எனவும்; புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில் மக்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும் எனவும் மனதார வாழ்த்துவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆண்களுக்கும் இலவச பஸ் பயணம்! எடப்பாடி பழனிசாமி மாஸ் அறிவிப்பு!