யூஸ் பண்ணிக்கோங்க மக்களே.. நாளை 12 வார்டுகளில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்..!!
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை 12 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் கடந்த ஜூலை 15-ஆம் தேதி கடலூரில் தொடங்கப்பட்ட “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம், மக்களுக்கு அரசு சேவைகளை வீடு தேடி வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு மகத்தான முயற்சியாகும். இத்திட்டம், 15 துறைகளை உள்ளடக்கி, 46 கிராமப்புற சேவைகள் மற்றும் 43 நகர்ப்புற சேவைகளை வழங்குகிறது.
பட்டா மாறுதல், ரேஷன் அட்டை, மின்சார இணைப்பு பெயர் மாற்றம், மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல சேவைகள் இதில் அடங்கும். மக்களின் அன்றாட தேவைகளை எளிதாக்குவதற்காக இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முதல் கட்டமாக, ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15 வரை 3,563 முகாம்கள் நடத்தப்பட்டு, 10,000 முகாம்கள் நவம்பர் வரை நடைபெற உள்ளன.
இதையும் படிங்க: நாளை 11 வார்டுகளில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்.. எந்தெந்த ஏரியா தெரியுமா..??
இதற்காக, பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று மக்களுக்கு முகாம்களின் விவரங்களையும், தேவையான ஆவணங்களையும் எடுத்துரைக்கின்றனர். இதன்மூலம், மக்கள் தொலைதூர அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. உடனடி தீர்வு காண முடியாத பிரச்சினைகளுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு வழங்கப்படும் என முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.
இத்திட்டம், குறிப்பாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற தவறிய பெண்களுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின் இதனை “புரட்சிகரமான திட்டம்” என வர்ணித்து, இது மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அரசு நிர்வாகத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்கிறது எனக் குறிப்பிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சியினரை விமர்சித்த ஸ்டாலின், உச்சநீதிமன்றம் இத்திட்டத்திற்கு ஆதரவு அளித்து, எதிர்ப்பு மனுவை தள்ளுபடி செய்து, மனுதாரருக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததையும் சுட்டிக்காட்டினார். இத்திட்டம், தமிழ்நாட்டின் சமூக நீதி மற்றும் மக்கள் நலனை மையமாகக் கொண்டு, குறிப்பாக பின்தங்கிய பிரிவினருக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது, திமுக அரசின் மக்கள் நல முயற்சிகளில் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது.
இந்நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (17.09.2025) 12 வார்டுகளில் நடைபெறவுள்ளது. திருவொற்றியூர் மண்டலம் (மண்டலம்-1), வார்டு-6ல் பி.கெனால் சாலையில் உள்ள காளி கோவில் திறந்தவெளி இடம், மாதவரம் மண்டலம் (மண்டலம்-3), வார்டு-33ல் பாரதியார் தெருவில் உள்ள ஏழுமலை நாயக்கர் மண்டபம், தண்டையார்பேட்டை மண்டலம் (மண்டலம்-4), வார்டு-46ல் வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகர், சி-கல்யாணபுரத்தில் உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளி, ராயபுரம் மண்டலம் (மண்டலம்-5),
வார்டு-56 பவளக்கார தெருவில் உள்ள ஜெயின் விலாஸ், திரு.வி.க. நகர் மண்டலம் (மண்டலம்-6), வார்டு-73ல் பட்டாளம், ஸ்டாரஹன்ஸ் சாலையில் உள்ள மண்டலம் 6 அலுவலகம், அம்பத்தூர் மண்டலம் (மண்டலம்-7), வார்டு-79ல் வெங்கடாபுரம், ரெட்ஹில்ஸ் சாலையில் உள்ள அருள் ஜோதி திருமண மண்டபம், தேனாம்பேட்டை மண்டலம் (மண்டலம்-9),
வார்டு-125ல், மயிலாப்பூர், சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள சாந்தோம் மேல்நிலைப்பள்ளி, கோடம்பாக்கம் மண்டலம் (மண்டலம்–10) வார்டு-134ல் மேற்கு மாம்பலம், பக்தவசலம் தெருவில் உள்ள விளையாட்டு மைதானம், வளசரவாக்கம் மண்டலம் (மண்டலம்–11) வார்டு-144ல் மதுரவாயல், பி.எச். சாலையில் உள்ள ஶ்ரீபாக்கியலட்சுமி திருமண மண்டபம், ஆலந்தூர் மண்டலம் (மண்டலம்–12) வார்டு-161ல் பொன்னியம்மன் கோவில் தெருவில் உள்ள ஏ.ஜி.எஸ். நிதி மேல்நிலை பள்ளி, அடையாறு மண்டலம் (மண்டலம்-13),
வார்டு-172 கிண்டி, ரேஸ் கோர்ஸ் உட்புற சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. தங்கும் விடுதி மைதானம், பெருங்குடி மண்டலம் (மண்டலம்–14) வார்டு-186ல் உள்ளகரம், புழுதிவாக்கம் பிரதான சாலையில் உள்ள ஶ்ரீ சுமங்கலி திருமண மண்டபம் ஆகிய 12 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.
இதையும் படிங்க: “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்.. செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின்..!!