“உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்.. செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின்..!!
“உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு அரசின் மக்கள் நலத் திட்டங்களில் ஒன்றான 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 13) தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை பெறப்பட்ட மனுக்களில் பெரும்பாலானவற்றுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஜூலை 15ம் தேதி தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், நவம்பர் மாதம் வரை தமிழ்நாடு முழுவதும் 10,000 சிறப்பு முகாம்களை நடத்தி, பொதுமக்களின் குறைகளை அவர்களது இருப்பிடங்களிலேயே தீர்த்து வைக்கும் நோக்கம் கொண்டது. அரசு சேவைகளை விரைவாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தபடி, இந்த முகாம்களில் பெறப்படும் மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு காண உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பள்ளிக்கு விடுமுறை கொடுத்து முகாம் நடந்த சம்பவம்! ஏத்துக்கவே முடியாதது... அன்பில் மகேஷ் கடும் கோபம்
இன்றைய ஆய்வுக் கூட்டத்தில், இதுவரை 14,54,517 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 7,23,482 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தீர்வு செய்யப்பட்ட மனுக்களில், 5,97,534 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றும், இது தீர்வுசெய்யப்பட்ட மனுக்களில் 83% ஆகும் என்று தமிழ்நாடு முதலமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது.
https://x.com/i/status/1966782231156027528
மீதமுள்ள மனுக்களை விரைவில் தீர்க்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அதேபோல் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பான கள ஆய்வுகளை விரைந்து முடித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், முகாம்கள் நடைபெற்றபோது மக்கள் தெரிவித்த கருத்துகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். குறிப்பாக, தெருவிளக்கு, இணைப்பு சாலை, குடிநீர் போன்ற சமுதாய கோரிக்கைகள் தொடர்பான மனுக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்தத் திட்டத்தின் மூலம், அரசு துறைகளின் சேவைகள் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் இந்த முகாம்களில் பங்கேற்று, உடனடி தீர்வுகளை வழங்கி வருகின்றனர்.
முதலமைச்சர் ஸ்டாலின், இந்தத் திட்டத்தை தொடங்கியபோது, "மக்களின் குறைகளை அவர்களது வீட்டு வாசலுக்கே சென்று தீர்க்க வேண்டும்" என்று கூறியிருந்தார். இதற்காக 1 லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட வாரியாக நடைபெறும் இந்த முகாம்கள், பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. உதாரணமாக, வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற முகாமில் உள்ளூர் பிரச்னைகள் குறித்து பெண்கள் குழு அமைச்சரை சூழ்ந்து கேள்வி எழுப்பிய சம்பவம் குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், திட்டத்தின் வெற்றியை மேலும் விரிவுபடுத்தும் வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. முதலமைச்சர், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். இதன் மூலம், தமிழ்நாடு அரசின் 'மக்களுடன் முதலமைச்சர்' என்ற கருத்து மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தத் திட்டத்துடன் இணைந்து 'நலம் காக்கும் ஸ்டாலின்' போன்ற பிற திட்டங்களின் செயல்பாடுகளும் ஆய்வு செய்யப்பட்டன.
பொதுமக்கள் இந்த முகாம்களைப் பயன்படுத்தி, அரசு சேவைகளை எளிதாகப் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான ungaludanstalin.tn.gov.in-இல் முகாம் விவரங்களை அறியலாம்.
இதையும் படிங்க: ஊரை அடிச்சு உலை வைக்கும் திமுக நாடகங்களுக்கு அரசு பள்ளிகள் பலிகடா! அண்ணாமலை விளாசல்