உயிருக்கு ஆபத்து! தனிப்படை பாதுகாப்பு கேட்டு மதுரை எஸ்பியிடம் உசிலம்பட்டி தவெக எம்.எல்.ஏ மனு!
உயிருக்கு ஆபத்து இருப்பதாகத் தனிப்பட்ட காவல் பாதுகாப்பு கோரி மதுரை எஸ்பியிடம் உசிலம்பட்டி தவெக எம்.எல்.ஏ. மனு அளித்துள்ளார்.
உசிலம்பட்டி தொகுதியில் மக்களை நேரில் சந்திக்கும் நிகழ்வுகளின் போது தனக்கு உயிருக்கு அச்சுறுத்தல் நிலவுவதாகவும், முன்விரோதம் மற்றும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகப் பழிவாங்கும் சூழ்ச்சிகள் நடைபெறுவதாகவும் கூறி மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் (SP) உசிலம்பட்டி தவெக எம்.எல்.ஏ விஜய் துப்பாக்கி ஏந்திய தனிப்பட்ட காவல் பாதுகாப்பு கோரி மனு அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் விஜய். இவர் இன்று மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் (SP) தனது உயிருக்குப் பாதுகாப்பு அளிக்கக் கோரி அதிகாரப்பூர்வ மனு ஒன்றைச் சமர்ப்பித்தார்.
உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதியில் தினமும் பொதுமக்களின் குறைகளைக் கேட்கும் கள ஆய்வுகளின் போதும், மக்களை நேரில் சந்திக்கும் நிகழ்வுகளின் போதும் சில சமூக விரோதிகள் திட்டமிட்டு இடையூறுகளை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார்கள். மேலும், தொகுதிக்குள் ஏற்கனவே நிலவி வரும் முன்விரோதம் மற்றும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது பழிவாங்கும் நோக்கில் சிலர் மறைமுகமான சூழ்ச்சிகளையும் அசம்பாவிதச் சதிகளையும் செய்ய முனைகிறார்கள் என்ற நம்பகமான தகவல்கள் எனக்குக் கிடைத்துள்ளன.
இதையும் படிங்க: காவிரி சர்ச்சைக்கு நடுவே கபினியில் நீர் திறப்பு..!! தமிழகத்திற்கு நிம்மதி..!!
இதன் காரணமாக எனது உயிருக்கும், உடமைகளுக்கும் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, நான் பொதுமக்களின் குறைகளைக் கேட்டுத் தொகுதியில் மக்களைச் சந்தித்துத் களப்பணியாற்றும் நிகழ்வுகளில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாத வகையில், எனக்கு உடனடியாகத் தனிப்பட்ட காவல் பாதுகாப்பு (Personal Security Guard) வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: இரட்டை சகோதரிகளை மணந்த இரட்டையர்கள்! திருமணத்தை நடத்தி வைத்த இரட்டை பாதிரியார்கள்!