ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி விழா!! திருச்சிக்கு டிச.30-ல் உள்ளூர் விடுமுறை!
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு வருகிற 30-ந்தேதி நடைபெற உள்ளது.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதசுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த விழா கடந்த டிசம்பர் 19-ம் தேதி தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் அல்லது சொர்க்கவாசல் திறப்பு வருகிற டிசம்பர் 30-ம் தேதி அதிகாலையில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசி விழா மொத்தம் 21 நாட்கள் நடைபெறும். இதில் முதல் 10 நாட்கள் 'பகல் பத்து' என்றும், அடுத்த 10 நாட்கள் 'இரா பத்து' என்றும் அழைக்கப்படும். விழாவின் இறுதி நாளான ஜனவரி 9-ம் தேதி நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறும்.
இதையும் படிங்க: கேரளாவில் மீண்டும் பரவும் பறவை காய்ச்சல்! கோழி இறைச்சி, முட்டை விற்பனைக்கு தடை!
சொர்க்கவாசல் திறக்கப்படும் நாளில் பக்தர்கள் அதிகாலையில் இருந்தே வரிசையில் காத்திருந்து, சொர்க்கவாசல் வழியாக சென்று பெருமாளை தரிசனம் செய்வார்கள். இது மோட்சம் அடையும் வாயில் என்ற நம்பிக்கையுடன் பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் ஆர்வமாக பங்கேற்கின்றனர்.
இந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை ஒட்டி, திருச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். சரவணன் டிசம்பர் 30-ம் தேதி (திங்கட்கிழமை) மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவை அன்று மூடப்பட்டிருக்கும். விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஜனவரி 24-ம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. பக்தர்கள் அமைதியாக வரிசையில் நின்று தரிசனம் செய்யுமாறு கோவில் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த விழா ஸ்ரீரங்கத்தின் ஆன்மிக முக்கியத்துவத்தை உலகறியச் செய்யும் ஒரு பெரிய நிகழ்வாகும்.
இதையும் படிங்க: தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்! 12 மீனவர்கள் கைதை கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டம்!