×
 

காமுக அரக்கர்களின் கைகளில் சிக்கும் பிஞ்சு குழந்தைகள்..!! கடும் நடவடிக்கை எடுக்கணும்..!! வானதி சீனிவாசன் வலியுறுத்தல்..!!

தமிழகத்தில் இன்று பிஞ்சு குழந்தைகள் கூட காமுக அரக்கர்களின் கீழ்தரமான செயலுக்கு பலியாகி இருப்பது கடும் வேதனைக்குரியது என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூரில் மூன்று வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வெளியான தகவல்கள் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளதாக பாஜக முன்னாள் எம்எல்ஏ வானதி சீனிவாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். வட மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியரின் குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உயிரிழந்ததாக கூறப்படும் தகவல் மிகவும் கவலைக்குரியதாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் முன்னோடி மாநிலமாக தமிழகம் நீண்ட காலமாக அறியப்பட்டு வந்தாலும், அண்மைக்காலங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவது சமூகத்தில் அச்சத்தை ஏற்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக, தன்னைக் காத்துக்கொள்ளக்கூட இயலாத பிஞ்சு குழந்தைகள் கூட பாலியல் வன்முறைக்கு இலக்காகும் நிலை உருவாகியிருப்பது மனிதநேயத்திற்கு எதிரான செயல் என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

இத்தகைய கொடூர குற்றங்களில் ஈடுபடுபவர்கள் எந்தவித இரக்கத்திற்கும் தகுதியற்றவர்கள் என்றும், அவர்கள் மீது சட்டத்தின் கீழ் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் காவல்துறை கண்காணிப்பு மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும், குற்றவாளிகளை விரைவாக கண்டறிந்து நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: "தவெக யாரைக் காப்பாற்ற நினைக்கிறது?" - ஹார்ட் டிஸ்க் விவகாரத்தில் வானதி சீனிவாசன் கேள்வி!

மேலும், ஆரம்பித்த நாள் முதல் கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை மாநிலம் முழுவதும் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில் செயல்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை காவல்துறை விரைவாகவும் வெளிப்படையாகவும் நடத்தி, உண்மை நிலையை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதும் அவரது அறிக்கையின் முக்கிய அம்சமாகும். 
 

இதையும் படிங்க: காலதாமதம் என்றாலும் வரவேற்கிறேன்! கே.என். நேரு மீதான வழக்கு குறித்து வானதி சீனிவாசன் அறிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share