“திமுகவுடன் நட்பு தொடர்கிறது...” - தமிழகமே அதிர அறிவித்த திருமாவளவன்... தவெகவிற்கு செம்ம ஷாக்...!
நாங்கள் ஏன் திமுகவுடன் தொடர்ந்து பயணிக்கிறோம் - விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பு
திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: "அரசியல் என்பது ஆதிக்கப் பார்ப்பணியத்திற்கு எதிரான சொல். அதனால் 'ஆதி திராவிடர்' என்று சொல்லப்படுவது ஒரு குறிப்பிட்ட சாதியைக் குறிக்காது. அந்த இடத்தில்தான், யாராவது பெரியாரைக் கொச்சைப்படுத்தினால் விடுதலைச் சிறுத்தைகள் அமைதியாக இருக்க மாட்டோம் என்று சொல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது. உடனே சிலர் எங்களை 'திமுக சொம்பு' என்று விமர்சிக்கத் தொடங்கினர்.
நாங்கள் ஏன் திமுகவுடன் தொடர்ந்து பயணிக்கிறோம் என்றால், நீண்ட காலமாக இயங்கி வரும் ஒரு அரசியலை திராவிடக் கட்சிகள், குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம், பெரியார் மற்றும் அண்ணா ஆகிய தலைவர்களின் சிந்தனையை முன்னிறுத்தி முன்னெடுத்து வருகிறது.
சமத்துவபுரம் என்பது கலைஞர் கொண்டு வந்த ஒரு புரட்சிகரமான திட்டம். அது நடைமுறையில் எந்த அளவுக்கு வெற்றி பெற்றது என்பது வேறு விஷயம். ஆனால் அந்த சிந்தனை உருவாக வேண்டுமே. 'ஊர் வேறு, சேரி வேறு' என்று காலங்காலமாகப் பிரிந்து வாழும் மக்களை ஒன்றாக வாழச் செய்ய வேண்டும் என்ற நோக்கில், 60 சதவீதம் தலித்துகளும், 40 சதவீதம் தலித் அல்லாதவர்களும் இணைந்து வாழ அரசே வீடுகள் கட்டிக் கொடுத்து குடியமர்த்திய திட்டம்தான் சமத்துவபுரம். அந்த சிந்தனை பெரியாரின் சிந்தனையிலிருந்தே தோன்றியது.
இதையும் படிங்க: பெண் நிர்வாகி ஆடை கிழிப்பு... ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை... தவெக எம்.எல்.ஏ. கண் முன் நடந்த களேபரம்...!
ஆகவே, பெரியாரின் சிந்தனையும் அம்பேத்கரின் சிந்தனையும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல. அந்தச் சிந்தனைகளை முன்னெடுக்கும் அரசியல் இயக்கமாக திமுக இருக்கிறது. அதனால், சனாதனத்தை எதிர்ப்பதற்கு திமுகவுடன் இணைந்து பயணிப்பதே பொருத்தமானதாக இருக்கும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு.
நாங்கள் சனாதனத்தை எதிர்த்து நிற்கிறோம். அதனால் பாஜகவை விமர்சிக்கிறோம். அதனால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும் விமர்சிக்கிறோம். வேறு எங்களுக்கு யாருடனும் தனிப்பட்ட பகை இல்லை. அந்த அமைப்புகளில் உள்ள தலைவர்களுடன் தனிப்பட்ட நட்பு இருக்கலாம்; அது வேறு. ஆனால் கொள்கை அடிப்படையில் ஆரிய ஆதிக்கத்தையும், பார்ப்பணியத்தையும், இந்துத்துவத்தையும் ஏற்றுக்கொண்டுள்ள பாஜகவை எதிர்க்க வேண்டிய தேவை இருக்கிறது.
பாஜக என்பது இமயமலையைப் போன்ற மிகப்பெரிய அரசியல் இயக்கம். அந்த இயக்கத்தை நாங்கள் தனியாக நின்று எதிர்ப்பது எளிதான விஷயம் அல்ல. எனவே, திமுக போன்ற திராவிட அரசியல் கட்சிகள் பாஜகவை எதிர்க்கும் வரை, அவர்கள் எங்களுக்கு நட்பு சக்திகள்தான்.
நாளை ஒருவேளை திமுக பாஜகவுடன் கை கோர்க்கும் நிலை வரலாம். ஏற்கனவே கை கோர்த்திருக்கலாம் என்பதும் வேறு விவாதம். ஆனால் அவர்கள் பாஜகவை எதிர்க்கும் வரை, அவர்கள் எங்களுக்கு நட்பு சக்திகள்தான். அதனால் அவர்களுடன் இருந்தோம்; அவர்களுடன் சேர்ந்து பாஜகவை எதிர்த்தோம்; தொடர்ந்து எதிர்ப்போம். அந்த வலிமை எங்களுக்கு தேவைப்படுகிறது."
இதையும் படிங்க: பாம்பின் நிழலில் தவளை போல் மக்கள் நிலை! தவெக அரசை சாடிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!