மதுரை மாநாட்டிற்கு ரூ.5 லட்சம் நன்கொடை கேட்டு அடாவடி.. 10 தவெகவினரை தட்டித்தூக்கிய போலீஸ்..!
வேடசந்தூர் அருகே தனியார் பால் நிறுவன ஊழியர்களிடம் மாநாட்டிற்கு 5 லட்சம் நன்கொடை கேட்டு மிரட்டிய தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் 10 பேர் மீது வழக்குப் பதிவு
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள வடமதுரை மோர்பட்டியில் தனியாருக்கு சொந்தமான பால் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் ரஞ்சித் யாதவ் என்பவர் திட்ட மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை திண்டுக்கல்லில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டிற்கு நன்கொடை கேட்டு தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகளான திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த முத்து ரத்தினவேல், நிலக்கோட்டை அருகே உள்ள சங்கல்பட்டியை சேர்ந்த முனிச்செல்வம் மற்றும் சிலர் பால் நிறுவனத்திற்கு சென்றுள்ளனர்.
அவர்களை வாட்ச்மேன் சத்தியநாராயணன் என்பவர் தடுத்தும், அத்துமீறி பால் நிறுவனத்திற்குள் நுழைந்து மாநாடு நடத்துவதற்கு பணம் 5 லட்சம் ரூபாய் நன்கொடை கொடுங்கள் என்று ரஞ்சித் யாதவிடம் கேட்டுள்ளனர்.
இதையும் படிங்க: டன் கணக்கில் குப்பை... போர்க்களம் போல் காட்சியளிக்கும் தவெக மாநாட்டு திடல்!
அதற்கு அவர் இப்போது எங்களால் பணம் தர முடியாது, அலுவலக மேலிடத்தில் கேட்டு சொல்கிறோம் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் நாங்கள் கேட்கும் போது பணம் தரவில்லை என்றால் உங்கள் பால் நிறுவனத்தை நடத்த விட மாட்டோம் என்று ஆபாசமாக பேசி மிரட்டி உள்ளனர்.
இதுகுறித்து ரஞ்சித் யாதவ் வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் முத்துரத்தினவேல், முனிச்செல்வம் உள்ளிட்ட 10 பேர் மீது வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: திமுக தொண்டன் கூட இப்படி சில்லிதனமா நடந்துக்க மாட்டார்! ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த அமைச்சர்..!