×
 

வேலூர் விமான நிலையம் அடுத்த மாதம் திறப்பு? கதிர் ஆனந்த் எம்.பி தகவல்!

‘உங்கள் கனவைச் சொல்லுங்கள்’ திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில், காட்பாடி மற்றும் குடியத்தம் தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அமைச்சரிடமிருந்து சாதகமான பதில் வந்துள்ளதாக எம்.பி கதிர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான வேலூர் விமான நிலையம் வரும் மார்ச் மாதம் (அடுத்த மாதம்) மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும் என வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் இன்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் உள்ள தனியார் விடுதி வளாகத்தில், தமிழக அரசின் 'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்ட நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சுப்பு லட்சுமி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டுப் பேசிய கதிர் ஆனந்த் எம்.பி., வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சிப் பணிகள் மற்றும் மத்திய அரசிடமிருந்து கிடைத்துள்ள முக்கிய அறிவிப்புகள் குறித்துப் பகிர்ந்து கொண்டார்.

அவர் பேசுகையில், "வேலூர் விமான நிலையத்தைத் திறப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் அடுத்த மாதம் எடுக்கப்படும் என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரிடமிருந்து எனக்குக் கடிதம் வந்துள்ளது. இது வேலூர் மாவட்டத்தின் தொழில் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்," என்றார்.

இதையும் படிங்க: "சென்னையில் பறக்கும் ரயில் இனி மெட்ரோ வசம்!" மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு!

மேலும், தனதுப் பணிகள் குறித்துப் பட்டியலிட்ட அவர், "நான் முதல்முறை போட்டியிட்டபோது மக்கள் வைத்தக் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறேன். சத்துவாச்சாரி தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளைக் குறைக்கச் சுரங்கப்பாதை (Subway) அமைத்துக் கொடுத்துள்ளேன். அதேபோல், போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தக் குடியாத்தம் நகருக்குப் புறவழிச்சாலை (Outer Ring Road) அமைத்துத் தந்துள்ளேன். தற்போது காட்பாடி பகுதியில் ஏற்படும் நெரிசலுக்குக் காரணம், சித்தூர் - ராணிப்பேட்டை நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருவதுதான். அந்தப் பணிகள் முடிந்ததும் போக்குவரத்துச் சீராகும்," என விளக்கமளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாநகராட்சி மேயர், சட்டமன்ற உறுப்பினர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்துகொண்டனர். விமான நிலையம் திறக்கப்படவுள்ளத் தகவல் வேலூர் மாவட்ட மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: “நாடாளுமன்றத்தில் பிரதமருக்கே பாதுகாப்பில்லை!” சேலத்தில் கனிமொழி எம்.பி. காட்டம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share