தகிக்கும் வேலூர்: மீண்டும் 108 டிகிரியை எட்டிய வெயில் - மக்கள் கடும் அவதி!
தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், வேலூர் மாவட்டத்தில் இன்று வெப்பம் 108 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தொட்டு இந்த ஆண்டின் உச்சத்தை மீண்டும் எட்டியுள்ளது.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வேலூர் மாவட்டத்தில் இன்று வெயில் மீண்டும் தனது உச்சத்தைத் தொட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளதால், அனல் காற்றின் பிடியில் சிக்கித் தவிக்கும் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் இயல்பை விட அதிகமாகவே இருந்து வருகிறது. இன்று வேலூரில் அதிகபட்சமாக 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இதற்கு முன்னதாக, கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி இதேபோல் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருந்தது. இடையில் சில நாட்கள் வெப்பம் சற்று குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அதே உச்ச நிலையை எட்டியுள்ளது வேலூர் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காலை 10 மணிக்கே வெயிலின் தாக்கம் தொடங்கிவிடுவதால், மதிய நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன. வெயிலுடன் சேர்ந்து வீசும் அனல் காற்றினால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இதையும் படிங்க: கோடை வெயிலுக்கு குட்பை: தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!
வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்கப் பொதுமக்கள் இளநீர், தர்பூசணி மற்றும் குளிர்பானங்களைத் தேடிச் செல்கின்றனர். வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி, அடுத்த சில நாட்களுக்கு உள் மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் இதே நிலையில் நீடிக்கக்கூடும் என்பதால், பொதுமக்கள் மதிய நேரங்களில் அத்தியாவசியத் தேவையின்றி வெளியே வருவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதையும் படிங்க: தமிழகத்தில் கொளுத்தும் வெயில்! திருச்சியில் 105°F பதிவு - 11 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டியது வெப்பம்!