×
 

தனியார் கால்நடை கல்லூரிகள் வேண்டாம் சென்னையில் மாணவர்கள் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம்!

தமிழகத்தில் கால்நடை மருத்துவ கல்வியை தனியார்மயமாக்குவதை கண்டித்தும், அரசு வேலைவாய்ப்புகளை உறுதி செய்ய கோரியும் சென்னை வெப்பேரியில் இன்று கால்நடை மருத்துவ மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

தமிழகத்தில் கால்நடை மருத்துவக் கல்வியைத் தனியார்மயமாக்கும் முயற்சியைக் கைவிடக் கோரியும், அரசுப் பணிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும் சென்னை வெப்பேரியில் உள்ள மெட்ராஸ் கால்நடை மருத்துவக் கல்லூரி முன்பு இன்று பிரம்மாண்ட கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராகக் கண்டனக் குரல்களை எழுப்பினர்.

தமிழகத்தில் ஏற்கனவே 7 அரசு கால்நடை மருத்துவக் கல்லூரிகள் மூலம் ஆண்டுக்கு 680-க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் உருவாகின்றனர். இந்நிலையில், புதிய தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி அளிப்பது கல்வித் தரத்தைப் பாதிப்பதோடு, வணிகமயமாக்கலுக்கும் வழிவகுக்கும் என மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தற்போது தமிழகத்தில் சுமார் 8,000-க்கும் மேற்பட்ட கால்நடை மருத்துவர்கள் பதிவு செய்து வேலைக்காகக் காத்திருக்கும் சூழலில், தனியார் கல்லூரிகள் வந்தால் வேலையில்லாத் திண்டாட்டம் மேலும் அதிகரிக்கும் எனத் தமிழக கால்நடை மருத்துவப் பட்டதாரிகள் கூட்டமைப்பு (TNVGF) எச்சரித்துள்ளது.

இதையும் படிங்க: துபாய் போர் பதற்றம்! பத்திரமாக சென்னை திரும்பினார் நடிகர் அஜித்!

வெப்பேரியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் சென்னை மட்டுமின்றி, சேலம், நாமக்கல், திருநெல்வேலி மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்களும் திரளாகப் பங்கேற்றுத் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

"No to Privatisation" (தனியார்மயமாக்கல் வேண்டாம்) மற்றும் "Plan Before Expansion" (விரிவாக்கத்திற்கு முன் முறையான திட்டமிடல் வேண்டும்) போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி மாணவர்கள் முழக்கமிட்டனர். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்குக் கோரிக்கை மனுவும் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கால்நடை பராமரிப்புத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பதே இவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில் மாணவர்களின் இந்தப் போராட்டம் கல்வி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: உடல் நசுங்கி தாய், மகள் உயிரிழந்த சோகம்... லோடு வேன் ஏறியதில் துடிதுடித்து பறிபோன உயிர்கள்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share