ஒரே நேரத்தில் இப்படியா?... விடிந்ததுமே விஜய்க்கு வந்த நல்ல மற்றும் கெட்ட செய்தி... ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின்...!
அதிமுக 7 இடங்களிலும், தமிழக வெற்றிக் கழகம் 2 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.
தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23 அன்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. இதில் சுதந்திரத்திற்குப் பிந்தைய தமிழக தேர்தல் வரலாற்றிலேயே அதிகபட்சமாக 85.1% வாக்குகள் பதிவாகியுள்ளன. மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க, காங்கிரஸ், வி.சி.க, இடதுசாரி கட்சிகள், தே.மு.தி.க, எஸ்.டி.பி.ஐ, ம.ம.க, ஐ.யு.எம்.எல் மற்றும் சில கட்சிகளின் கூட்டணி, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க, அ.ம.மு.க, த.மா.கா மற்றும் சில கட்சிகளின் கூட்டணி, முதன்முறையாகக் களம் காணும் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (த.வெ.க), நாம் தமிழர் கட்சி, டாக்டர் ராமதாஸ் மற்றும் சசிகலா கூட்டணி, புதிய தமிழகம், தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் களம் கண்டனர்.
75,064 வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகள் மற்றும் பெறப்பட்ட தபால் வாக்குகள் ஆகியவற்றின் வாக்கு எண்ணிக்கை, இதற்காக அமைக்கப்பட்ட 62 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVMs) பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக 234 வாக்கு எண்ணும் (EVM Counting) அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதே வளாகங்களில், தபால் வாக்குகள் மற்றும் மின்னணு முறையில் அனுப்பப்பட்ட தபால் வாக்குகளை (ETPBs) எண்ணுவதற்காக கூடுதலாக 240 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பதிவான வாக்குகளை எண்ணும் பணிக்காக மொத்தம் 3,324 மேஜைகள் பயன்படுத்தப்படவுள்ளன.
வாக்கு எண்ணும் மையங்களைச் சுற்றிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போது தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பெரம்பூர் தொகுதியில் விஜய் முன்னிலை வகித்து வருகிறார். சென்னை லயோலா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பெரம்பூர் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதி வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: பரபரக்கும் வாக்கு எண்ணிக்கை..! இது ஆரம்பம்தான்..! பெரம்பூர் தொகுதியில் விஜய் முன்னிலை..! ..!
தற்போதைய நிலவரப்படி, முதல் முறையாக சட்டமன்ர தேர்தலில் போட்டியிட்ட விஜய் பெரம்பூர் தொகுதியில் தபால் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்து வருகிறார். இருப்பினும் அவர் போட்டியிட்ட மற்றொரு தொகுதியான திருச்சி கிழக்கில் பின்னடைவை சந்தித்து வருகிறார்.
இதேசமயத்தில் தபால் வாக்குகளில் 71க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக முன்னிலை வகித்து வருகிறது. கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்து வருகிறார். அதிமுக 7 இடங்களிலும், தமிழக வெற்றிக் கழகம் 2 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் ஒரு இடம் கூட தபால் வாக்குகளில் முன்னிலை பெறாதது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: “கருப்பு மஞ்சளை கலக்கி பாரு காவி வருது சித்தப்பு...” - தவெகவுக்கு எதிராக கொதித்தெழுந்த கோவன்...!