தொண்டர்களை தூக்கி வீசிய விஜய் பவுன்சர்கள்... நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் புகார்..!
தொண்டர்களை தூக்கி வீசிய தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் பவுன்சர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 21 அன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாடு, நடிகர் விஜய்யின் அரசியல் பயணத்தில் முக்கியமான ஒரு படியாக அமைந்தது. மதுரை மாவட்டத்தின் பாரபத்தி பகுதியில் 506 ஏக்கர் பரப்பளவில் நடைபெற்ற இந்த நிகழ்வு, லட்சக்கணக்கான தொண்டர்களை ஒன்றிணைத்து, அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சியை வெளிப்படுத்தியது.
ஆனால், இந்த மாநாட்டின் முக்கிய நிகழ்வுகளுக்கு மத்தியில், ஒரு சர்ச்சைக்குரிய சம்பவம் பரவலான கவனத்தை ஈர்த்தது. மாநாட்டில் அமைக்கப்பட்டிருந்த ரேம்ப் வாக் மேடையில் ஏற முயன்ற இளைஞர்களை விஜய்யின் பவுன்சர்கள் தூக்கி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விஜய் தொண்டர்களை நேரடியாக சந்திக்க 300 மீட்டர் நீளமுள்ள ரேம்ப் வாக் நடைமேடை அமைக்கப்பட்டிருந்தது. இந்த ரேம்ப் வாக், விஜய்யின் நட்சத்திர அந்தஸ்தையும், அவரது தொண்டர்களுடனான நெருக்கத்தையும் வெளிப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: நீங்கா நினைவில் வாழும் அண்ணன் விஜயகாந்திற்கு பிறந்தநாள்! வாழ்த்துகளை பகிர்ந்த விஜய்..!
விஜய் தொண்டர்களை சந்திக்க ரேம்ப் வாக் மேடையில் நடந்து சென்றபோது, அவரை நெருங்கி வரவேற்க முயன்ற சில இளைஞர்கள் மேடையில் ஏற முயற்சித்தனர். அவர்களை பவுன்சர்கள் தடுத்து, கீழே தள்ளிய, சிலரை தூக்கி வீசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில், பெரம்பலூர் மாவட்டம் பெரியம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் புகாரளித்துள்ளார். விஜய் நடந்து வந்த ரேம்ப் மீது ஏற முயன்ற சரத்குமாரை பவுன்சர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றினர். விஜயின் பவுன்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: UNCLE -ஐ அங்கிள் தான் சொல்ல முடியும்... மன்சூர் அலிகானின் வைரல் வீடியோ..!