விஜய் CM ஆகிட்டா ஹெலிகாப்டர் கன்ஃபார்ம்!! பனையூர் - தலைமை செயலகம்! ஹெலிபேட் அமைக்க ஆலோசனை!
முதல்வராக பொறுப்பேற்கவுள்ள விஜய், பனையூரில் இருந்து தலைமை செயலகம் வந்து செல்ல, 'ஹெலிபேட்' அமைப்பது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தமிழக அரசியலில் பரபரப்பு நீடித்து வரும் நிலையில், முதல்வராக பொறுப்பேற்க உள்ளதாக கூறப்படும் தவெக தலைவர் விஜய்க்காக புதிய ஹெலிபேட் வசதிகள் அமைப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பனையூரில் உள்ள விஜய் வீட்டிலிருந்து சென்னை தலைமை செயலகத்திற்கு தினமும் விரைவாக சென்று வர இந்த திட்டம் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.
சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. பெரும்பான்மை எண்களை எட்டாததால் கூட்டணி ஆதரவை பெறும் முயற்சிகளில் விஜய் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், விஜய் முதல்வராக பதவியேற்றால் அவரது தினசரி பயண ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரிலிருந்து புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமை செயலகம் வருவதற்கு போக்குவரத்து நெரிசல் காரணமாக ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: விஜய் தலைமையில்தான் ஆட்சி! அது உறுதி! காங்கிரசில் அமைச்சர் பதவி யாருக்கு?!
பாதுகாப்பு காரணங்களுக்காக போக்குவரத்தை நிறுத்தி வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டால் பொதுமக்களுக்கு கடும் நெரிசல் ஏற்படும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதனால் ஹெலிகாப்டர் பயணம் தொடர்பான திட்டம் முக்கியமாக பரிசீலிக்கப்படுகிறது.
இதற்காக தலைமை செயலக வளாகத்திற்கு அருகே ஹெலிபேட் அமைக்க முடியுமா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். நேப்பியர் பாலம் அருகே கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹெலிபேட் தற்போது பயன்பாட்டில் உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் தேர்தல் பிரசார காலங்களில் அந்த ஹெலிபேட்டை பயன்படுத்தியிருந்தார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் சென்னை வருகையின்போது அதையே பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் அந்த இடம் கடலோர காவல் படை கட்டுப்பாட்டில் இருப்பதால் தொடர்ந்து பயன்படுத்த அனுமதி கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனால் தலைமை செயலக வளாகத்தில் உள்ள ராணுவ மைதானத்தில் தற்காலிக ஹெலிபேட் வசதி ஏற்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் பனையூரில் விஜய் வீட்டிற்கு அருகிலும் இரண்டு இடங்களில் ஹெலிபேட் அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: எப்போது தளபதி சர்கார்..? விஜய் - ஆளுநர் சந்திப்பு நிறைவு..! விளக்கம் கேட்கும் அர்லேகர்..!