ரிப்போட்டர் மீது தாக்குதல்... பதைப்பதைக்கும் தமிழ்நாடு..! தவெக தலைவர் விஜய் கண்டனம்..!
ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய MLA பழனியாண்டி உள்ளிட்டோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விஜய் வலியுறுத்தினார்.
கல்குவாரி விவகாரத்தில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடுபவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். செய்தியாளர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் எம்எல்ஏ பழனியாண்டி ஆதாரத்துடன் சிக்கியுள்ளார். தாக்குதல் தொடர்பான ஆடியோக்கள் அவ்வப்போது வெளியாகி இருந்தன.
இன்று செய்தியாளரை எம்எல்ஏ பழனியாண்டி கேமராவை பிடுங்கி தாக்க வரும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் எம் எல் ஏ பழனியாண்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். ஜனநாயகத்தின் நான்காவது தூணாகச் செயல்படும் ஊடகவியலாளர்கள் மீது ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி நடத்திய தாக்குதல் கடும் கண்டனத்திற்கு உரியது என தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
குவாரி தொடர்பாகச் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தித் தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் மீது ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி கொடூரமாகத் தாக்குதல் நடத்திய வீடியோ, அண்மையில் வெளியானது என்றும் அதற்குப் பிறகும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்காமல், வேடிக்கை பார்க்கும் நிலையில்தான் முதல்வர் இருக்கிறார் என்பது வெட்கக் கேடானது என்றும் சாடினார்.
இதையும் படிங்க: MLA பழனியாண்டியை தகுதி நீக்கம் செய்யணும்... CASE போடுங்க..! ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்..!
பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி, பொதுவெளியில் இவ்வளவு மோசமாகச் செயல்படுவது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது என்பதற்கு இன்னுமொரு சான்று என்று கூறினார். ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப் பதிவு செய்து, உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு உரிய நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். தமிழ்நாடே பாதுகாப்பின்றிப் பதைபதைத்து இருக்கையில், தூக்கத்தில் இருக்கும் முதல்வரால் மக்கள் துயரத்தில் இருக்கின்றனர் என்றும் இப்படிப்பட்ட ஆட்சியை மக்கள், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தூக்கி எறிவது உறுதி எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: விஜய்க்கு ஒண்ணுமே தெரியாது..! நாங்கள் ஊழல் கட்சியா? இபிஎஸ் சரமாரி கேள்வி..!