×
 

விஜய்யின் எழுச்சி திமுக-விற்கு பாதிப்பு; என்டிஏ-விற்கு சாதகம்! - டிடிவி தினகரன் அதிரடி!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஏற்படுத்தும் அரசியல் எழுச்சி, திமுக கூட்டணிக்குத்தான் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், இது என்டிஏ (NDA) கூட்டணிக்குச் சாதகமாக அமையும் என்றும்  டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழக (அமமுக) நிர்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை மற்றும் தமிழகத்தின் தற்போதையச் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து அவர் முன்வைத்தக் கருத்துக்கள் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்ற அரசியல் கட்சிகளுக்கு ஒரு மிகப்பெரியச் சரிவை ஏற்படுத்துவது உறுதி என்று டிடிவி தினகரன் தெரிவித்தார். "விஜய்யின் இந்த அரசியல் எழுச்சி திமுக தலைமையிலானக் கூட்டணிக்கு மிகப் பெரியப் பாதிப்பை உண்டாக்கும். அதே சமயம், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) இது சாதகமானச் சூழலையே உருவாக்கும்," என்று அவர் கணித்துள்ளார்.

தமிழகத்தின் தற்போதைய நிலை குறித்துக் கவலைத் தெரிவித்த அவர், "தமிழகம் தற்போது போதைப் பொருட்களின் சர்வதேசச் சந்தையாகவும், சர்வதேசத் துறைமுகமாகவும் மாறிவிட்டது. பள்ளி மாணவர்களிடம் கூடப் போதைப் பொருட்கள் புழக்கத்தில் உள்ளன. காவல்துறையினரே போதை விற்பனையில் ஈடுபடும் அவலம் இங்கு நீடிக்கிறது," எனச் சாடினார். கடந்த தேர்தலில் அமமுக தனித்துப் போட்டியிட்டதால் திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பு கிடைத்தது; ஆனால் இம்முறை அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் அமமுக இணைந்துள்ளதால், அந்த வாய்ப்பு திமுக-விற்கு ஒருபோதும் கிடைக்காது என அவர் முழங்கினார்.

இதையும் படிங்க: சசிகலாவை சந்தித்த நிர்வாகி நீக்கம்! டிடிவி தினகரன் அதிரடி நடவடிக்கை!

திமுக கூட்டணி குறித்து விமர்சித்த அவர், "வெளியில் அவர்கள் ஒற்றுமையாக இருப்பது போல் காட்டிக் கொண்டாலும், உள்ளுக்குள் அவர்களுக்குள் எவ்வித ஒற்றுமையும் இல்லை என்பது தற்போது வெட்டவெளிச்சமாகி வருகிறது. கொள்கை ஒன்று என்றால் அவர்களுக்கு எதற்குத் தனித்தனி கட்சிகள்? காங்கிரசை எதிர்த்துத் தான் திமுக உருவாக்கப்பட்டது, ஆனால் இன்று அவர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர். அதிகாரத்திற்காக இவர்களுக்குள் நடப்பது ஒரு போலி நாடகம்," எனச் சாடினார். வரும் தேர்தலில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ‘அம்மாவின் ஆட்சி’ அமைவது உறுதி என அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அதிமுகவில் இணையவே விருப்பம்..!! டிடிவி நினைத்தால் அது நடக்கும்..!! ஓபிஎஸ் ஓபன் டாக்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share