×
 

கூலித்தொழிலாளியிடம் ரூ.2,500 லஞ்சம்... கையும் களவுமாக சிக்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது...!

அய்யம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர், கூலித்தொழிலாளியிடம் ரூபாய் 2500 லஞ்சம் பெற்ற போது, கையும் களவுமாக பிடிபட்டார். கைது செய்யப்பட்ட அவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி சிறையில் அடைத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம்,  வத்தலகுண்டு அருகே அய்யம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக (வி.ஏ.ஒ) கடந்த ஓராண்டுகளாக பணியாற்றி வருபவர் நிலக்கோட்டை அடுத்த,  பள்ளப்பட்டியைச்  சேர்ந்த ரமேஷ் (47) இவர்,  அய்யம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயக் கூலித்தொழிலாளி கார்த்திகேயன் (37) என்பவர் தனது நிலத்தை சர்வே செய்து, பெயர்  மாற்றத்துடன்  பட்டா கேட்டு விண்ணப்பித்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில்,  அவரிடம் லஞ்சம் ரூபாய் 3000 கேட்டு, மூன்று முறை அவரது விண்ணப்பத்தை கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் தள்ளுபடி செய்ததாக கூறப்படுகிறது. பின்னர், ரூபாய் 2500 லஞ்சம் கொடுப்பதாக கூலிதொழிலாளி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,  இதுகுறித்து கூலித்தொழிலாளி கார்த்திகேயன் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில்  லஞ்ச ஒழிப்பு துறையினர்,இன்று கார்த்திகேயனிடம் ரசாயனம் தடவிய ரூபாய் 2500-ரை  அய்யம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் ரமேஷிடம் அவரது அலுவலகத்தில் வைத்து  கொடுத்த போது,  மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரமேஷை கையும் களவுமாக பிடித்தனர்.

இதையும் படிங்க: டெண்டர் வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் - கையும் களவுமாக சிக்கிய பொதுப்பணித்துறை அலுவலர்...!

பின்னர்,  திண்டுக்கல் லஞ்ச  ஒழிப்புத்துறை, துணை கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.,) நாகராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரூபா கீதாராணி உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ்சிடம் ரூபாய் 2500 பறிமுதல் செய்து, அவரிடம் 8 மணி நேரம்  தீவிர  விசாரணை நடத்திய பின்னர் கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.  

 அய்யம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம்  அப்பகுதியில் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: இதுக்கு இல்லையா சார் ஒரு என்டு?... கரூரில் திடீரென முளைத்த தீண்டாமை சுவரால் பரபரப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share