×
 

விநாயகர் சதுர்த்தி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! சென்னை-போத்தனூர், தாம்பரம்-தென்காசி ரயில்கள் இயக்கம்!

விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி சென்னை போத்தனூர் தாம்பரம் தென்காசி இடையே சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

விநாயகர் சதுர்த்திப் பண்டிகையை முன்னிட்டுச் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் பொதுமக்களின் அசுரக் கூட்ட நெரிசலைத் தணிக்கும் வகையிலும், பயணிகள் தடையின்றிப் பயணிக்க ஏதுவாகவும் சென்னை சென்ட்ரல்–போத்தனூர் மற்றும் தாம்பரம்–தென்காசி/செங்கோட்டை வழித்தடங்களில் சிறப்பு விரைவு ரயில்களை இயக்கத் தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி திருநாள் தொடர் விடுமுறையையொட்டி லட்சக்கணக்கான பொதுமக்கள் தலைநகர் சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் மற்றும் கொங்கு மண்டலப் பகுதிகளுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டு வருகின்றனர். இதனால் வழக்கமாக இயக்கப்படும் அனைத்து விரைவு ரயில்களிலும் காத்திருப்போர் பட்டியல் கிடுகிடுவென உயர்ந்து இடமில்லாத சூழல் நிலவுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, பயணிகளின் வசதிக்காக இரண்டு முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னை சென்ட்ரல்–போத்தனூர் வழித்தடத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண்: 06023) வரும் செப்டம்பர் 11-ஆம் தேதி புதன்கிழமை இரவு 11.50 மணிக்குச் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 9 மணிக்கு போத்தனூர் சென்றடையும். மறுமார்க்கத்தில், போத்தனூர்–சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (எண்: 06024) வரும் செப்டம்பர் 14-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு போத்தனூரிலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 9.25 மணிக்குச் சென்னை சென்ட்ரலை வந்தடையும். இந்த ரயில்கள் இரு மார்க்கங்களிலும் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வேளாங்கண்ணி திருவிழா: தாம்பரம் - வேளாங்கண்ணி இடையே சிறப்பு வாராந்திர ரயில்கள் இயக்கம்!

இதேபோல், தென் மாவட்டப் பயணிகளின் வசதிக்காக இயக்கப்படும் தாம்பரம்–தென்காசி சிறப்பு ரயில் (எண்: 06089) செப்டம்பர் 11-ஆம் தேதி இரவு 7.30 மணிக்குத் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 6.15 மணிக்குத் தென்காசி சென்றடையும். மறுமார்க்கத்தில், செங்கோட்டை–தாம்பரம் சிறப்பு ரயில் (எண்: 06090) செப்டம்பர் 14-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குச் செங்கோட்டையிலிருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.20 மணிக்குத் தாம்பரம் வந்தடையும். 

இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இச்சிறப்பு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு நாளை (செப்டம்பர் 10) காலை 8 மணிக்குத் தொடங்கும் என்பதால் பயணிகள் விரைந்து முன்பதிவு செய்து கொள்ளுமாறு தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.

இதையும் படிங்க: எழும்பூர் ரயில் சேவை மாற்றம் ரத்து! ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share