×
 

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் கோரம்: 17 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழப்பு!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில், ஞாயிற்றுக்கிழமை பணியில் ஈடுபட்டிருந்த 17 தொழிலாளர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று மாலை நிகழ்ந்த பயங்கர வெடிவிபத்தில் 17 தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். தேர்தல் விடுமுறைக்காக ஞாயிற்றுக்கிழமையான இன்று கூடுதல் பணி நடந்தபோது இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது.

விருதுநகர் அருகே உள்ள கட்டனார்பட்டியில், கோவிந்தநல்லூரைச் சேர்ந்த முத்துமாணிக்கம் என்பவருக்குச் சொந்தமான 'வனஜா பட்டாசு ஆலை' இயங்கி வருகிறது. மாவட்ட வருவாய் அலுவலர் (DRO) உரிமம் பெற்று இயங்கி வரும் இந்த ஆலையில் 10-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் பட்டாசு ஆலைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். ஆனால், வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதால், அன்று விடுமுறை அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்காக ஈடு செய்யும் வகையில்  இன்று பணி வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இன்று மாலை சுமார் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது, ஒரு அறையில் ஏற்பட்ட உராய்வு காரணமாகத் திடீரென மருந்து வெடித்துச் சிதறியது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ அருகில் இருந்த மற்ற அறைகளுக்கும் பரவி, அடுத்தடுத்து வெடிக்கத் தொடங்கியது. இந்த விபத்தில் 4 அறைகள் தரைமட்டமாகின. வெடிச்சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர். எனினும், தீயின் வேகத்தில் சிக்கிக்கொண்ட 17 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: சாத்தூரில் நிதின் நபின் ரோடு ஷோ! நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக பாஜக தேசிய தலைவர் வாக்கு சேகரிப்பு!

தகவலறிந்த சிவகாசி, சாத்தூர் மற்றும் விருதுநகர் பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பலியானவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்குச் சிதைந்துள்ளதால், அவர்கள் யார் என்பதைக் கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இந்த கோர விபத்து விருதுநகர் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: ஜோசப் விஜயா? ஜோசப் கிருஷ்ணாவா? செய்தியாளர்கள் சந்திப்பில் நயினார் சரமாரி கேள்வி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share