ஜெயலலிதா பிறந்தநாள் விழா... பசும்பொன்னில் சசிகலா தலைமையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் தொடக்கம்!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு, சசிகலா தலைமையில் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று (பிப்ரவரி 24, 2026) பிரம்மாண்ட பொதுக்கூட்டம் தொடங்கியுள்ளது.
மறைந்த தமிழக முதலமைச்சர் மற்றும் அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி ஜெ. ஜெயலலிதா அவர்களின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வி.கே. சசிகலா தலைமையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் தற்போது தொடங்கியுள்ளது. தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், இந்த மேடையில் சசிகலா வெளியிடப் போகும் அறிவிப்புகள் அரசியல் களத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் வருகை: நேற்று சென்னையில் உள்ள அண்ணா, எம்ஜிஆர் மற்றும் அம்மா நினைவிடங்களில் மரியாதை செலுத்தி ஆசீர்வாதம் வாங்கிய சசிகலா, இன்று பசும்பொன்னிற்கு வருகை தந்துள்ளார். அண்ணா மற்றும் ஜெயலலிதா காட்டிய பாதையிலேயே தனது அரசியல் பயணம் தொடரும் என அவர் ஏற்கனவே உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
அம்மாவின் பிறந்தநாளான இன்று ஒரு நல்ல தகவலைச் சொல்வேன்" என்று சசிகலா நேற்று குறிப்பிட்டிருந்தது, இந்தத் தேர்தல் பொதுக்கூட்டத்தின் மீது ஒட்டுமொத்தத் தமிழகத்தின் கவனத்தையும் திருப்பியுள்ளது. ஏற்கனவே தனது ஆதரவாளர்களிடம் இருந்து விருப்ப மனுக்களைப் பெற்று வரும் சசிகலா, வரும் தேர்தலில் தனது அணியின் நிலைப்பாடு என்ன? தனித்துப் போட்டியா அல்லது பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைவதா? என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்த மேடையில் வெளியிட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: அதிமுக வாக்குறுதிகள் எடுபடாது... எடப்பாடி பழனிசாமியை சாடிய திருமாவளவன் எம்.பி.
பசும்பொன் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் இக்கூட்டத்தில் திரண்டுள்ளனர். மேடை முழுவதும் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் ஆகியோரின் கட்-அவுட்கள் மற்றும் பதாகைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அம்மாவின் உண்மைத் தொண்டர்கள் அனைவரும் என் பக்கம் இருக்கிறார்கள்" எனக் கூறி வரும் சசிகலா, சிதறிக் கிடக்கும் அதிமுக அணிகளை ஒன்றிணைப்பது குறித்த தனது அடுத்தகட்டத் திட்டத்தையும் இங்கு முன்வைக்கக்கூடும்.
ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெறும் இந்த எழுச்சி மாநாடு, அதிமுக-வின் அதிகாரப் போட்டியில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்துமா என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரிந்துவிடும்.
இதையும் படிங்க: "நான் என்ன தவறு செய்தேன்? இப்போதே அரசியலை விட்டு விலகத் தயார்!" ஓ. பன்னீர்செல்வம் உருக்கம்!